வழக்கமான சாம்பார், ரசம் வைத்து போர் அடிக்கிறது என்று நினைக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கவலை வேண்டாம், சுவையான நெல்லி மோர் ரெசிபியை எப்படி எளிதாக செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
சீரகம்,
வரமிளகாய்,
பூண்டு,
நெல்லிக்காய்,
தயிர்,
உப்பு,
இஞ்சி,
கறிவேப்பிலை,
பச்சை மிளகாய் மற்றும்
பெருங்காயம்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்ற வேண்டும். இதில் ஒன்றரை டீஸ்பூன் சீரகம், இரண்டு வரமிளகாய், பூண்டு ஆகியவற்றை வறுக்க வேண்டும். அதன் பின்னர், இவற்றை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
இதன் பின்னர், இதே மசாலாவுடன் இரண்டு பெரிய நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி அரைக்க வேண்டும். இறுதியாக, ஒரு கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். இப்போது, லேசாக தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, இடித்த இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இறுதியாக சிறிது பெருங்காயத்தூள் தூவி இறக்கி விடவும். இந்த தாளிப்பை அரைத்து வைத்த நெல்லிக்காய் - தயிர் கலவையுடன் சேர்த்து ஊற்றவும்.
இப்படி செய்தால் சுவையான நெல்லி மோர் தயாராக இருக்கும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது, சுவை அட்டகாசமாக இருக்கும்.