சாதம் மற்றும் சப்பாத்திக்கு கோவக்காய் ஃப்ரை சிறந்த ஒரு சைட் டிஷ் ஆகும். இதன் தனித்துவமான சுவையும், ஆரோக்கிய நன்மைகளும் அனைவரையும் கவரும். குறிப்பாக, தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்களும் இதனை சாப்பிடலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சுவையான கோவக்காய் பொரியல் எப்படி செய்யலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 400 கிராம்,
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
பூண்டு - 10 பற்கள் மற்றும்
வேர்க்கடலை பொடி.
செய்முறை:
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் மெல்லியதாக நறுக்கிய கோவக்காயைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு, நல்லெண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், மிளகு தூள், பெருங்காயத்தூள், இடித்த பூண்டு மற்றும் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன் பின்னர், கடாயை மூடி கோவக்காய் மென்மையாகும் வரை வேகவைக்க வேண்டும். அவ்வப்போது இதனை கிளறி விடலாம். கோவக்காய் நன்றாக வெந்ததும், மூடியை அகற்றி மிதமான சூட்டில் 6-7 நிமிடங்கள் வறுக்க வேண்டும்.
இறுதியாக, அரைத்து வைத்துள்ள வறுத்த வேர்க்கடலை பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும். அதன் பின்னர் அடுப்பை அணைத்து விடலாம். இவ்வாறு செய்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கோவக்காய் ஃப்ரை தயாராகி விடும்.
இதனை சாதம், சப்பாத்தி என நமக்கு பிடித்தமான உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.