தக்காளி சாதம் என்பது மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு உணவு. இது லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றது. இதை எப்படி டேஸ்டியாகவும் சுவையாகவும் எப்படி செய்வது என்று ஷெரின்ஸ் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் - 1 கப்
தக்காளி - 2-3 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1-2
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2-3 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1 சிறிய துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
உப்பு
செய்முறை:
அரிசியை நன்கு கழுவி 20-30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் நீரை வடிகட்டி தனியே வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளலாம். அரைத்தால் சாதம் ஒரே மாதிரியான நிறத்தில் இருக்கும்.
ஒரு குக்கர் அல்லது கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும், கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். நறுக்கிய அல்லது அரைத்த தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும். தக்காளி நன்கு மசிவது தக்காளி சாதத்தின் சுவைக்கு முக்கியம்.
இப்போது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும். மசாலாக்களின் பச்சை வாசனை போக வதக்கவும். ஊறவைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும், மசாலா அரிசியுடன் நன்கு கலக்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். குக்கரை மூடி, மிதமான தீயில் 1-2 விசில் வரும் வரை வேக விடவும். பிரஷர் தானாக அடங்கியதும் குக்கரை திறக்கவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி மெதுவாக கிளறி விடவும்.
சாதம் குழையாமல் இருக்க, தண்ணீர் அளவை சரியாகப் பயன்படுத்தவும். ஒரு கப் அரிசிக்கு 1.5 கப் தண்ணீர் பொதுவாக சரியானதாக இருக்கும். சூடாக இருக்கும்போது தக்காளி சாதத்தை கிளறாமல், சிறிது நேரம் ஆறவிட்டு கிளறினால் சாதம் உதிரி உதிரியாக வரும். தக்காளி சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அப்பளம், வடகம், உருளைக்கிழங்கு வறுவல் அல்லது தயிர் பச்சடி மிக நன்றாக இருக்கும். இந்த தக்காளி சாதம் உங்கள் லஞ்ச் பாக்ஸ்க்கு சுவையாகவும், எளிதாகவும் இருக்கும்.