இட்லிக்கு பல வகையான சாம்பார், சட்னி செய்தாலும் பொடி சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை அதிகமாகவே இருக்கும். அப்படி சுவையான பொடியை சத்து நிறைந்ததாக மாற்றும் ஒரு டிப்ஸை இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை,
கடலை பருப்பு,
உளுந்து,
துவரம் பருப்பு,
சீரகம்,
மிளகு,
வெள்ளை எள்,
எண்ணெய்,
பூண்டு,
வரமிளகாய்,
உப்பு மற்றும்
பெருங்காயத்தூள்.
செய்முறை:
பொடிக்கு தேவையான அளவு முருங்கைக் கீரையை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன் பின்னர், அடுப்பில் கடாய் வைத்து முருங்கை கீரையை வறுக்க வேண்டும். அதற்கடுத்து கீரையை தனியாக எடுத்துக் கொள்ளவும். இனி, இதே கடாயில் நான்கு டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து மற்றும் ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பை தனித்தனியாக வறுக்கவும்.
அடுத்தபடியாக ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், மிளகு மற்றும் ஒன்றரை டேபிள் ஸ்பூன் வெள்ளை எள் சேர்த்து வறுக்கலாம். இனி கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு, வரமிளகாய் ஆகியவற்றை வறுக்கவும். இப்போது, வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் பொடியாக அரைக்க வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கலாம்.
இவ்வாறு செய்தால் ஹெல்தியான முருங்கை இட்லி பொடி தயாராக இருக்கும். இதில் அதிகளவில் இரும்புச் சத்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே, சாதாரண இட்லி பொடிக்கு பதிலாக இத்தகைய சத்தான பொடியை பயன்படுத்தலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.