சுவையான சப்பாத்தியை எப்படி லேயர் லேயராக செய்வது என தற்போது பார்க்கலாம். இவை மிருதுவாக இருப்பதால், எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
உப்பு,
சர்க்கரை,
தண்ணீர்,
கோதுமை மாவு,
எண்ணெய்,
நெய்,
கார்ன்ஃபிளவர் மாவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 4 டேபிள் ஸ்பூன் தண்ணீர், 2 கப் கோதுமை மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன் பின்னர், ஒன்றேகால் கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மீண்டும் கலக்க வேண்டும்.
இவ்வாறு சப்பாத்தி மாவை சுமார் 7 நிமிடங்களுக்கு தொடர்ந்து பிசைய வேண்டும். இப்படி செய்தால் சப்பாத்தி சாஃப்டாக வரும். இதையடுத்து, ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவை 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
இந்த மாவு ஊறும் நேரத்தில், 5 டேபிள் ஸ்பூன் நெய்யுடன், 2 டேபிள் ஸ்பூன் கார்ன்ஃபிளவர் மாவு சேர்த்து கலக்க வேண்டும். சப்பாத்தி மாவு ஊறியதும், அவற்றை சிறிய உருண்டைகளாக பிரித்து எடுக்க வேண்டும். இந்த உருண்டையை சிறிது கோதுமை மாவில் தேய்த்து விட்டு, நெய்யுடன் சேர்த்து கலந்து வைத்திருந்த கார்ன்ஃபிளவர் மாவு கலவையை, சப்பாத்தி மாவு மீது தடவ வேண்டும்.
இப்போது தேய்த்த சப்பாத்தி மாவை சிறிது சிறிதாக சுருட்டி விட்டு, மீண்டும் சப்பாத்தி வடிவத்திற்கு தேய்க்க வேண்டும். இறுதியாக தேய்த்து வைத்திருந்த மாவை, அடுப்பில் சுட்டு எடுத்தால், சுவையான சப்பாத்தி லேயர் லேயராக கிடைத்து விடும்.