காலை உணவுக்கு இட்லி, தோசை அல்லது மதிய உணவுக்கு சாதம் என எதுவாக இருந்தாலும், சூப்பராக பொருந்தும் ஒரு காரசாரமான சட்னி ரெசிபியை பற்றி இங்கே பார்க்கலாம். இதைச் செய்வது மிகவும் சுலபம் என்பதால், சமையலில் புதியவர்கள் கூட எளிதாகச் செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்,
காய்ந்த மிளகாய் - 4,
காஷ்மீரி மிளகாய் - 4,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் (தாளிக்க)
செய்முறை:
முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், நான்கு காஷ்மீரி மிளகாய் (இது நல்ல சிவப்பு நிறத்தைக் கொடுக்கும், காரம் குறைவாக இருக்கும்), சிறிய அளவில் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
இப்போது, இந்த கலவையை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சட்னி மிகவும் நீர்த்துவிடாமல் பார்த்துக்கொள்ள்வது அவசியம். அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
இறுதியாக, ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெயை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், அதனை அரைத்து வைத்திருக்கும் சட்னியின் மீது ஊற்றி நன்கு கலக்கவும். இவ்வாறு செய்தால் காரசாரமான, சுவையான சின்ன வெங்காய சட்னி தயாராகி விடும். இதை சூடான இட்லி, தோசை, சாதம் அல்லது பழைய சாதத்துடன் கூட சுவைக்கலாம். இதன் மணமும், காரமும் நிச்சயம் உங்களை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.