சில வகையான உணவுகள் நமது பாரம்பரியத்தில் இடம்பெற்றிருந்தன. காலப்போக்கில் அவற்றை நாம் மறந்திருப்போம். அந்த வகையில், சுவையான பாரம்பரிய உணவான கத்திரிக்காய் ரசவாங்கி செய்முறையை செஃப் தீனா தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய்,
மஞ்சள் தூள்,
உப்பு,
பட்டை,
உளுந்து,
கடலை பருப்பு,
மல்லி விதைகள்,
மிளகாய்,
தேங்காய்,
நல்லெண்ணெய்,
கடுகு,
சீரகம்,
பெருங்காயத்தூள்,
கொத்தமல்லி இலைகள்,
புளி கரைசல் மற்றும்
வெல்லம்.
செய்முறை:
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். இதனை மஞ்சள் தூள் மற்றும் உப்பு கலந்த தண்ணீரில் ஊற வைக்கவும். இனி, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிய துண்டு பட்டை, ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து, கடலை பருப்பு, மல்லி விதைகள் மற்றும் 5 மிளகாய் சேர்த்து வறுக்கலாம்.
இதன் நிறம் மாறியது, சிறிதாக வெட்டிய தேங்காய் துண்டுகளை இத்துடன் சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும். பின்னர், இவை அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கலாம். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
இதில் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், 2 மிளகாய் மற்றும் ஊறவைத்த கத்திரிக்காய் சேர்த்து வதக்க வேண்டும். இதற்கடுத்து, உப்பு, கொத்தமல்லி இலைகள், சிறிய கப் புளி கரைசல் சேர்க்கலாம். மேலும், கொஞ்சமாக மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கலாம்.
ஐந்து நிமிடங்களுக்கு பின்னர், அரைத்து வைத்த மசாலா, ஒரு கப் தண்ணீர், சிறிது வெல்லம் சேர்த்து இறக்கினால் சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயாராக இருக்கும். இது ஒரு வகையான பாரம்பரிய உணவு என்று செஃப் தீனா தெரிவித்துள்ளார்.