'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழியை கூறுவார்கள். அந்த வகையில் இலுப்பைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் இலை, பூ, விதை, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை.
பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு போன்ற பல்வேறு பிரச்சனைக்கு இலுப்பை மருந்தாக பயன்படுகிறது. அதன்படி, இலுப்பைப் பூ துவையல் செய்முறையை காண்போம்.
இலுப்பைப் பூவின் இனிப்புத் தன்மையுடன், மிளகாயின் காரம், புளி மற்றும் உப்பின் சரியான கலவையில் உருவாகும் இந்தத் துவையல், சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இலுப்பைப் பூ.
மிளகாய் வற்றல்.
புளி.
உப்பு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
முதலில் இலுப்பைப் பூவை நன்றாக வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ந்த பூவை ஒரு கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு, மிளகாய் வற்றலை தனியே வறுத்து எடுக்கவும். பின்னர், புளியையும் லேசாக வறுத்து தனியாக வைக்கலாம். இனி வறுத்த இலுப்பைப் பூ, மிளகாய் வற்றல், புளி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்து எடுக்க வேண்டும்.
அரைத்த துவையல் பொடியை சிறு உருண்டைகளாக பிடித்து, ஒரு டப்பாவில் அடைக்கலாம். இந்த துவையல் சுமார் ஆறு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.