சுவையான மதிய உணவுக்கான சிறந்த தேர்வுகளில் ஒன்று, எளிதாக குக்கரில் சமைக்கக்கூடிய பீட்ரூட் சாதம். வழக்கமான உணவுகளிலிருந்து மாறுபட்டு, சத்தான மற்றும் வண்ணமயமான இந்த சாதம், குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை விரைவாக எப்படி செய்வது என்று அர்புதாஸ் கிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப் (20 நிமிடம் ஊறவைத்து வடிகட்டவும்)
பீட்ரூட் - 1 பெரியது (தோல் சீவி துருவியது)
வெங்காயம் - 1 பெரியது (நீளமாக நறுக்கியது)
தக்காளி - 1 சிறியது (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (கீறியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு
தண்ணீர் - 1.5 கப்
கொத்தமல்லி இலை
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
தக்காளி சேர்த்து குழைய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும். துருவிய பீட்ரூட்டை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 5-7 நிமிடங்கள் வதக்கவும்.
இப்போது ஊறவைத்த அரிசியை சேர்த்து மெதுவாக கிளறவும். பின்னர் 1.5 கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விடவும். குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை சமைக்கவும். விசில் வந்ததும், அடுப்பை அணைத்து, ஆவி முழுவதுமாக அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.
நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி, மெதுவாக கிளறி விடவும். சுவையான மற்றும் சத்தான பீட்ரூட் சாதம் தயார். இதை தயிர் பச்சடி அல்லது சிப்ஸுடன் பரிமாறலாம்.