புளியே இல்லாமல் புளியோதரை செய்ய முடியுமா என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்கு தான். கோயிலில் கொடுக்கப்படும் புளியோதரை ரெசிபியை சிம்பிளாக வீட்டிலேயே செய்யலாம். இதற்காக குறிப்புகளை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மாங்காய்,
உளுந்து,
மல்லி,
கடலை பருப்பு,
மிளகு,
வெள்ளை எள்,
கடுகு,
வெந்தயம்,
வரமிளகாய்,
கறிவேப்பிலை,
வேர்க்கடலை,
முந்திரி பருப்பு மற்றும்
சாதம்.
செய்முறை:
நன்கு புளிப்பு ஏறிய மாங்காயின் தோலை சீவி, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் உளுந்து, மல்லி, கடலை பருப்பு மற்றும் மிளகு ஆகியவை சேர்த்து வறுக்கவும்.
இதில் இருந்து வாசனை வரும் போது, இரண்டு ஸ்பூன் வெள்ளை எள், அரை ஸ்பூன் கடுகு, சிறிது வெந்தயம் சேர்த்து மீண்டும் வறுக்க வேண்டும். இவற்றை தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடலாம்.
இப்போது, அதே கடாயில் நான்கு வரமிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வறுக்கலாம். பின்னர், வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைத்து பொடியாக்க வேண்டும். இப்போது, அடுப்பில் இருக்கும் கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
இதில் வேர்க்கடலை, முந்திரி பருப்பு போட்டு வறுத்த பின்னர், அவற்றை தனியாக எடுத்துக் கொள்ளவும். இப்போது, கடுகு, கடலை பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை மீண்டும் வறுக்க வேண்டும். இதன் பின்னர், அரைத்து வைத்த மாங்காயை சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்தபடியாக, அரைத்து வைத்த மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளற வேண்டும். இந்தக் கலவையை உதிரியாக வடித்து வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்து கலந்தால் கோயில் ஸ்டைலில் சுவையான புளியோதரை ரெடியாகி விடும். இத்துடன் வறுத்த வேர்க்கடலை, முந்திரியை சேக்கலாம்.