இனிப்பு பண்டங்கள் அனைவருக்கும் பிடிக்கும். லட்டு, பாதுஷா, அதிரசம், மைசூர் பாக் என இவற்றை எல்லாம் பார்த்தாலே சாப்பிடத் தோணும். அதிலும் ஜாங்கிரி என்றால் பலருக்கு கொள்ளைப் பிரியம். ஜாங்கிரியின் கலர், கடிக்கும் போது வாயுக்குள் ஜீரா செய்யும் மாயம் என ஜாங்கிரி சாப்பிடுவது சிலருக்கு என்றால் அவ்வளவு இஷ்டம்.
இந்த ஜாங்கிரியை நாம் பெரும்பாலும் கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே இந்த ஜாங்கிரியை நீங்களும் செய்யலாம். தீபாவளி நெருங்கும் வேளையில் மினி ஜாங்கிரி ரெசிபியை தெரிந்துக் கொண்டால், நீங்களே உங்கள் வீட்டில் செய்து சாப்பிடலாம். சூப்பரான, சிம்பிளான ஜாங்கிரி ரெசிபியை இப்போது பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முழு உளுந்து – 1 கப்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சக்கரை – 2 கப்
கேசரி பவுடர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் உளுந்தை நன்றாக அலசிய பின், 2 மணி நேரத்திற்கும் மேலாக ஊறவைத்து தண்ணீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்கும் போது குளிர்ந்த நீர் சேர்த்துக் கொள்வது நல்லது. மொத்தத்தில் குறைவான அளவு நீர் சேர்த்து, கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் அரிசி மாவு மற்றும் கேசரி பவுடர் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். இதனை அப்படியே 10 நிமிடத்திற்கு வைத்து விட வேண்டும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர், 2 கப் சக்கரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். சக்கரை கரைந்து பாகு பதத்தில் வந்த உடன் அதில் சேகரி பவுடர் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். அரை கம்பி பதம் வந்த உடன் இதனை இறக்கி வைக்க வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். பின்னர் மாவை காலி எண்ணெய் பாக்கெட்டு அல்லது ஜிலேபி துணியில் போட்டு, ஜாங்கிரிகளை சுட்டு எடுக்க வேண்டும்.
நன்றாக வெந்த உடன் இந்த ஜாங்கிரிகளை ஜீராவில் போட்டு ஊற வைக்க வேண்டும். 7-8 நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் டேஸ்டியான ஜாங்கிரிகளை எடுத்து சுவைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“