ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் மிகவும் பிரபலமான, சுவையான நல்லாம்பட்டி மட்டன் வறுவல் செய்முறை பற்றி பார்ப்போம். இது ஒரு தனித்துவமான மசாலா கலவையுடன் தயாரிக்கப்படுவதால், இதன் சுவை அனைவரையும் கவரும். இந்த வறுவலை சிக்கனிலும் முயற்சி செய்யலாம். இதனை எப்படி செய்யலாம் என்று சக்கரசாதமும் வடகறியும் இன்ஸ்டா யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
மட்டன்: 1/4 கிலோ
நல்லெண்ணெய்
சோம்பு
பூண்டு
கறிவேப்பிலை
சின்ன வெங்காயம்
இஞ்சி பூண்டு விழுது
வரமிளகாய் - 3
தக்காளி - 2
குழம்பு மிளகாய்த்தூள்
உப்பு
மல்லி
மிளகு
சீரகம்
சோம்பு
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
கறிவேப்பிலை
செய்முறை:
முதலில், நல்லாம்பட்டி மசாலாவுக்குத் தேவையான மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு கடாயில் வறுத்து (ரோஸ்ட் செய்து) பின்னர் அரைத்து பொடியாக எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும், சோம்பு, நீளமாக நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இப்போது, விதைகள் நீக்கி, சின்னதாக நறுக்கிய மூன்று வரமிளகாய், இரண்டு தக்காளி, குழம்பு மிளகாய்த்தூள், மற்றும் ஏற்கனவே வேகவைத்த மட்டன் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக, அரைத்து வைத்துள்ள நல்லாம்பட்டி மசாலாவைச் சேர்த்து, மட்டனுடன் நன்கு கலந்து, மசாலா காய்ந்து (ட்ரை ஆகும்) வரை வறுக்கவும். இந்தச் சுவையான நல்லாம்பட்டி மட்டன் வறுவலை நீங்கள் சிக்கனிலும் செய்து பார்க்கலாம்.