விருந்து சாப்பாடு என்றாலே பாயசம் இல்லாமல் முழுமை அடையாது. நமது உணவுக்கான பாரம்பரியத்தில் பாயசம் முதன்மையான இடத்தை பெறுகிறது. அந்த வகையில், சுவையான பருப்பு பாயசம் ரெசிபியை, செஃப் தீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதனை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு - 400 கிராம்,
கடலை பருப்பு - 250 கிராம்,
ஜவ்வரிசி - 200 கிராம்,
பச்சரிசி - 150 கிராம்,
ஏலக்காய் பொடி - தேவையான அளவு,
வெல்லம் - தேவையான அளவு,
தேங்காய் - 1,
முந்திரி - 150 கிராம்,
உலர்ந்த திராட்சை - 100 கிராம் மற்றும்
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
முதலில் அடுப்பில் கடாய் வைத்து அதனை சூடுபடுத்த வேண்டும். இதில் பாசி பருப்பு, கடலை பருப்பு, பச்சரிசி ஆகிய அனைத்தையும் வறுக்க வேண்டும். இதில் இருந்து வாசனை வரும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.
இவை அனைத்தும் சற்று நிறம் மாறியதும் தண்ணீர் ஊற்றவும். அதன் பின்னர், ஜவ்வரிசி சேர்த்து சுமார் 20 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். இதையடுத்து வெல்லம் சேர்த்து கரைக்க வேண்டும். இதனிடையே, அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து அதில் நெய் ஊற்றவும்.
இதில் தேங்காய் சேர்த்து வறுக்க வேண்டும். தேங்காயின் நிறம் சற்று மாறியதும் முந்திரி, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும். இவை அனைத்தும் சரியான பக்குவத்திற்கு வந்த பின்னர், இவற்றை அடுப்பில் இருக்கும் பாயசத்துடன் சேர்த்து கலக்கலாம். இறுதியாக ஏலக்காய் பொடி தூவி இறக்கினால், சுவையான பருப்பு பாயசம் தயாராகி விடும்.