ஆரோக்கியமான வாழ்வினை ஒரே நாளில் அடைந்துவிட முடியாது. அதற்காக சிறு வயது முதலே உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனமாக இருத்தல் அவசியம். சத்தான உணவுகளின் பட்டியலில் கீரைக்கு எப்போதும் முதன்மையான இடமுண்டு. அதிலும், அரைக்கீரையின் பயன் இன்றி அமையாதது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, குழந்தை பருவத்திலேயே நம் உடலுக்கு வலிமை கொடுப்பது அரைக்கீரை எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்த உதவுவது அரைக்கீரை. இதன் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் எளிய மனிதர்கள் கூட மிகச் சுலபமாக அரைக்கீரையை வாங்கி பயன்பெறலாம்.
மேலும், குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பின்னர் திட உணவை பழக்கப்படுத்தும் போது அரைக்கீரையில் இருந்து தான் தொடங்குவார்கள் எனவும் மருத்துவர் சிவராமன் விவரித்துள்ளார். இத்தகைய மருத்துவ பயன்கள் நிறைந்த அரைக்கீரை பார்ப்பதற்கு சாதாரண களைச்செடியை போன்று காட்சியளிக்கும். ஆனால், அது உடலுக்கு அளிக்கக் கூடிய பயன்கள் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த அரைக்கீரையை, ருசியாக சமைத்து சாப்பிடுவது எப்படி என தற்போது பார்க்கலாம்.
இதற்கு தேவையான பொருள்கள்:
அரைக்கீரை,
5 - 8 பல் பூண்டுகள்,
சின்ன வெங்காயம்,
பச்சை மிளகாய்,
தக்காளி,
புளி,
தேவையான அளவு தண்ணீர்,
உப்பு,
எண்ணெய்,
கடுகு,
கறிவேப்பிலை,
வெங்காயம்
செய்முறை:
முதலில் அரைக்கீரை, 5 - 8 பல் பூண்டுகள், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, புளி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை குக்கரில் வைத்து மசியல் பதத்திற்கு வேக வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர், நன்றாக வேக வைத்த மசியலை இத்துடன் சேர்த்து பரிமாறினால் அரைக்கீரை கடையல் தயாராகி விடும்.
பார்ப்பதற்கும், செய்வதற்கும் மிக எளிமையாக காட்சியளிக்கும் இந்த உணவு நம் உடலுக்கு அளிக்க கூடிய பயன் இன்றி அமையாதது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“