உணவே மருந்து என்னும் கூற்றை அதிகமாக கடைப்பிடிப்பவர்கள் இந்தியர்கள் தான் என நம்மால் கூற முடியும். அவ்வாறு நாம் தினசரி சாப்பிடும் உணவுகளில் இருந்து நம் உடலுக்கு தேவையான சத்துகளை பெற்றுக் கொள்கிறோம். அந்த வகையில் மஞ்சள் தூள், மிளகு தூள் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கும் சாம்பாரை அதிகமாக சாப்பிடுவதால் இந்தியர்களுக்கு குடல் புற்றுநோய் குறைவாக வருகிறது என ஆய்வறிக்கைகள் கூறுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
அத்தகைய மருத்துவ பயன்கள் நிறைந்த சாம்பாரை ருசியாகவும் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். அதற்கு தேவையான பொருள்கள்,
ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய்,
ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு,
10 கறிவேப்பிலை இலைகள்,
மூன்று சிவப்பு மிளகாய்கள்,
50 கிராம் வெங்காயம்
ஒரு தக்காளி
ஒரு முருங்கைக்காய்
இரண்டு கத்திரிக்காய்
1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி,
1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி,
தேவையான அளவு பருப்பு,
புளி கரைசல்,
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, 10 கறிவேப்பிலைகள், மூன்று சிவப்பு மிளகாய்கள், 50 கிராம் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அத்துடன் நன்றாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு முருங்கைக்காய் மற்றும் சிறிது உப்பும் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின்னர், இரண்டு கத்திரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இவை நன்றாக சூடாகி வரும் போது 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் சாம்பார் பொடி ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை கொதிக்கும் போது ஊறவைத்த பருப்பு, புளிகரைசல் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி தூவி எடுத்தால் சுவையான மற்றும் மருத்துவ குணம் மிக்க சாம்பார் தயாராகி விடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“