சைவ உணவு பிரியர்களுக்கு ஏற்ற வகையில் காரசாரமான வாழைக்காய் பெப்பர் கிரேவி செய்முறையை இதில் காணலாம். இதன் சுவை பெப்பர் சிக்கனுக்கு இணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான பொருட்கள்:
வாழைக்காய்,
தயிர்,
மஞ்சள் தூள்,
மிளகாய் தூள்,
உப்பு,
கார்ன்ஃபிளவர் மாவு,
எண்ணெய்,
கிராம்பு,
ஏலக்காய்,
அன்னாசிப்பூ,
வெங்காயம்,
தக்காளி,
பச்சை மிளகாய்,
கறிவேப்பிலை,
இஞ்சி - பூண்டு விழுது,
கரம் மசாலா.
செய்முறை:
ஒரு வாழைக்காயை தோல் சீவி விட்டு சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், இவை நிறம் மாறாமல் இருப்பதற்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இனி ஒரு கப் தயிர், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
இதையடுத்து, தண்ணீரில் ஊற வைத்த வாழைக்காயை இந்த மசாலாவுடன் சேர்த்து கலக்கலாம். இதற்கடுத்து இவை இரண்டையும் சேர்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு நன்றாக ஊறியதும் தயிரை வடிகட்டி விட்டு, வாழைக்காயை மட்டும் பிரித்து எடுக்கவும்.
இத்துடன் நான்கு ஸ்பூன் கார்ன்ஃபிளவர் மாவு சேர்த்து சூடான எண்ணெய்யில் பொறித்து எடுத்துக் கொள்ளலாம். இப்போது, பெப்பர் கிரேவி செய்வதற்கு அடுப்பில் கடாய் வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.
இதில் இரண்டு பட்டை, நான்கு கிராம்பு, ஏலக்காய், ஒரு அன்னாசிப்பூ சேர்த்து வறுக்க வேண்டும். இதன் பின்னர், பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயத்தை சேர்த்து வதக்கலாம். இது பொந்நிறமாக மாறியதும் இரண்டு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை கலக்க வேண்டும்.
மேலும், இரண்டு தக்காளி, உப்பு, ஒன்றரை டேபிள் ஸ்பூன் மிளகு தூள், தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கலாம். இதில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, பொறித்து வைத்த வாழைக்காய் சேர்த்து கலக்கவும்.
இவை அனைத்தும் ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இவ்வாறு செய்தால் சுவையான பெப்பர் வாழைக்காய் கிரேவி தயாராகி விடும்.