ஃப்ரைட் ரைஸ் என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், இதனை கடைகளில் இருந்து வாங்கி சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று பலர் கருதுகின்றனர். அந்த வகையில், சத்தான வெஜ் ஃப்ரைட் ரைஸ் எப்படி வீட்டில் செய்யலாம் என்று காண்போம்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய்,
200 கிராம் பாஸ்மதி அரிசி,
1 கேரட்,
8 பீன்ஸ்,
அரை குடைமிளகாய்,
முட்டைக்கோஸ்,
காளான்,
சோயா சாஸ்,
மிளகு,
கொத்தமல்லி இலைகள்,
வெங்காயம்,
உப்பு,
6 பூண்டு மற்றும்
பச்சை மிளகாய்.
செய்முறை:
அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். இந்த எண்ணெய் காய்ந்த பின்னர், பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். குறிப்பாக, இதில் இருந்து வாசனை வரும் வரை வதக்க வேண்டும்.
இதன் பின்னர், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், காளான், குடைமிளகாய், முட்டைக்கோஸ் ஆகியவை சேர்த்து வதக்கலாம். இவை அனைத்திலும் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிய பின்னர், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இந்தக் காய்கறிகள் அனைத்தும் சுமார் 80 சதவீதம் வரை வதங்கிய பின்னர், வடித்து வைத்திருக்கும் பாஸ்மதி அரிசி சாதத்தை இதில் சேர்க்க வேண்டும். அதன் பின்னர், மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்றாக 5 நிமிடங்களுக்கு கிளற வேண்டும்.
இறுதியாக, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான வெஜ் ஃப்ரைட் ரைஸ் தயாராகி விடும். இது சுவை மட்டுமின்றி சத்து மிகுந்தது என்பதால் எல்லோரும் சாப்பிடலாம்.