டீக்கடை சுவையில், மொறுமொறுப்பான மசால் வடை அல்லது பருப்பு வடை எப்படி செய்வது என்று பார்ப்போம். பொதுவாக டீக்கடைகளில் பட்டாணிப் பருப்பைப் பயன்படுத்தி வடை செய்வார்கள். ஆனால், இந்த முறை நாம் அனைவரும் எளிதாகக் கிடைக்கும் கடலைப்பருப்பைப் பயன்படுத்தி, டீக்கடை சுவையுடன் அருமையான மசால் வடையை எப்படித் தயாரிப்பது என்று டீக்கடை கிச்சன் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்க்கலாம். இந்த வடை வெளியிலிருந்து மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும்.
Advertisment
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு பெருஞ்சீரகம் சின்ன சீரகம் முழு மல்லி இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை முருங்கைக்கீரை வெங்காயம் உப்பு பெருங்காயத்தூள் எண்ணெய்
செய்முறை
Advertisment
Advertisements
கடலைப்பருப்பை குறைந்தது 2 மணி நேரம் ஊறவைத்து, நன்கு கழுவி, தண்ணீர் சற்றும் இல்லாமல் வடிகட்டி எடுக்கவும். (பருப்பு அதிகமாக ஊறிவிடாமல் கவனமாக இருக்கவும், அது வடையின் பதத்தை மாற்றலாம்). வடிகட்டிய கடலைப்பருப்பை, மிக்ஸி ஜாரில் சிறிது சிறிதாகப் போட்டு, "பல்ஸ் மோட்"டில் விட்டு விட்டு கொரகொரப்பாக அரைக்கவும். மாவு மிக நைசாக இருக்கக்கூடாது. அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்திற்கு மாற்றவும். (அரை கிலோ பருப்பில் சுமார் 20-22 வடைகள் தயாரிக்கலாம்.)
அரைத்த மாவுடன் பெருஞ்சீரகம், சின்ன சீரகம், நொறுக்கிய முழு மல்லி, இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, முருங்கைக்கீரை (சேர்ப்பதானால்), பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான உப்பு, பெருங்காயத்தூள் ஆகிய அனைத்தையும் சேர்க்கவும்.
அனைத்து பொருட்களையும் மாவுடன் சேர்த்து, கையால் நன்றாகப் பிசையவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. மாவு கெட்டியாக, வடை பிடிக்கும் பதம் வரும் வரை பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும், தீயை மிதமான நிலைக்கு குறைக்கவும்.
பிசைந்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டையாக வடை போலத் தட்டி, சூடான எண்ணெயில் மெதுவாகப் போடவும். ஒரே நேரத்தில் அதிகமாகப் போடாமல், கடாயின் அளவுக்கு ஏற்ப வடைகளைப் பொரித்தெடுக்கவும்.
வடை இருபுறமும் பொன்னிறமாக மற்றும் மொறுமொறுப்பாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். பொரித்த வடைகளை எண்ணெய் வடிக்கும் தட்டில் அல்லது டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை உறிஞ்ச விடவும்.
அவ்வளவுதான், டீக்கடை சுவையில் அருமையான, மொறுமொறுப்பான மசால் வடை தயார். மழைக்கால மாலை நேரங்களில் சூடான தேநீருடன் இதைச் சேர்த்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.