நம்முடைய வீடுகளில் இருக்கும் முக்கிய மூலிகைப் பொருளாக திப்பிலி இருக்கிறது. இந்நிலையில், திப்பிலி பயன்கள் குறித்து டாக்டர் நித்யா 'ஹெல்த் சீக்ரட்ஸ்' யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறுவது பின்வருமாறு:-
சித்த மருத்துவத்தில் திப்பிலியை திரிகடுகம் என அழைப்பார்கள். சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றுமே கபத்தை வேருடன் அறுக்கும். மிளகை விட திப்பிலி அதிக காரமுடையதாக இருக்கிறது. இது உடல் வெப்பத்தை அதிகரிக்கும். சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மருந்துகளில் திப்பிலி கண்டிப்பாக இடம் பிடிக்கும்.
திப்பிலியை உணவில் எடுத்து வரலாம். சளி, உடல் அலுப்பாக இருந்தால், குறிப்பாக அடிச்சுப் போட்ட மாதிரி உடல் வலி இருந்தால் திப்பிலி சேர்த்த பானம் பருகி வரலாம். அந்த பானத்தை, 2 லிட்டர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் திப்பிலி சேர்த்து கொதிக்க விட்டு தயார் செய்து கொள்ளலாம்.
தொண்டை கரகரப்பு, வறண்ட தொண்டை, வறட்டு இருமல் தொண்டையில் முள் குத்துவது போல் வலி இருந்தால், திப்பிலி சேர்த்து காயச்சிய பானத்தை பருகி வரலாம். இதனை ஒரு நாள் முழுதும் கூட பருகலாம். தொடர்ந்து 3 நாட்கள் மட்டுமே பருகி வர வேண்டும்.
உடல் அலுப்பு, நெஞ்சு சளியை போக்க திப்பிலி ரசம் சாப்பிட்டு வரலாம். ரசம் வைக்கும் போது மிளகுக்கு பதில் திப்பிலி சேர்க்கவும். திப்பிலியை நெய் விட்டு வறுத்து எடுத்து வழக்கம் போல் சீரகம், பூண்டு, பெருங்காயம் ஆகியவற்றை பொடியாக அரைத்து ரசம் வைத்து விட வேண்டும்.
வாயுத்தொல்லை அதிகம் இருக்கும் மக்கள் வாரத்தில் 3 முறை திப்பிலி ரசம் சாப்பிடலாம். காலையில் எழுந்தவுடன் சளி அதிகமாக துப்பும் மக்களும் திப்பிலி ரசம் சாப்பிடலாம். பாலூட்டும் தாய்மார்கள் திப்பிலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தாய்ப்பால் அதிகம் சுரக்க இது உதவுகிறது. பாலூட்டும் தாய்மார்களின் இடுப்பு வலியையும் இது போக்குகிறது.
தோல் நோய்களுக்கும், தேமலுக்கும் திப்பிலி உதவுகிறது. திப்பிலியை வறுத்து அரைத்து பொடியாக எடுத்துக் கொள்ளவும். அந்தப் பொடியை தேனுடன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் நீங்கும். நுரையீரல் மற்றும் ரத்தத்தில் உள்ள கழிவுகளையும் திப்பிலி நீக்குகிறது.
இவ்வாறு அவர் கூறுகிறார்.
https://www.youtube.com/watch?v=8Ul1lpvzm0w
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.