சப்பாத்தி சாஃப்ட் ஆக வரவேண்டும் என்றுதான் ஆசை, ஆனால் மாவு பிசையும்போதே சப்பாத்தி கடினமாகிவிடுகிறது என்று நினைப்பவர்கள் சப்பாத்தி மாவு எப்படி பிசைவது, அதனை எப்படி செஉட வேண்டும் என்று எல்லாம் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – 1 - 1.5 கப்
உப்பு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக்கொள்ளவும். அதனுடன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது 2 டீஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து மாவுடன் நன்றாக கலந்துவிடவும். இது சப்பாத்தி மிருதுவாக வர உதவும். மெதுவாக வெதுவெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, மாவை மென்மையாகப் பிசையவும். மாவு கைகளில் ஒட்டாமல் வரும் வரை 5-7 நிமிடங்கள் நன்றாகப் பிசைய வேண்டும். மாவு எவ்வளவு நன்றாகப் பிசைகிறீர்களோ, அவ்வளவு மிருதுவாக சப்பாத்தி வரும்.
பிசைந்த மாவை ஒரு உருண்டையாக உருட்டி, அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, ஈரம் இல்லாத ஒரு சுத்தமான துணியால் மூடி, குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊற விடவும். மாவு நன்றாக ஊறிய பிறகு சப்பாத்தி இன்னும் மென்மையாக வரும். ஊறிய மாவை எடுத்து, சிறிய உருண்டைகளாகப் பிரித்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் சிறிது கோதுமை மாவில் தோய்த்து, சப்பாத்திக் கட்டையால் மெதுவாக, வட்டமாக தேய்க்கவும். தேய்க்கும்போது ஒரே சீரான தடிமன் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். சப்பாத்தி இடும்போது ஓட்டைகள் விழாமல் தேய்க்க வேண்டும், இல்லையென்றால் சப்பாத்தி உப்பாது. ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, சூடாக்கவும். தணல் மிதமான தீயில் இருக்க வேண்டும். கல்லு நன்றாகச் சூடானதும், தேய்த்து வைத்த சப்பாத்தியை போடவும்.
ஒரு பக்கம் லேசாக வெந்து, சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பித்ததும், மறுபக்கம் திருப்பிப் போடவும்.
மறுபக்கம் சற்று அதிகமாக வெந்ததும், மீண்டும் முதல் பக்கம் திருப்பிப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவவும். சப்பாத்தி பூரி போல உப்பி வர ஆரம்பிக்கும். இப்போது மறுபக்கம் திருப்பிப் போட்டு, அந்தப் பக்கமும் எண்ணெய்/நெய் தடவி, நன்றாக சுட்டெடுக்கவும். தோசை திருப்பியால் லேசாக அழுத்தம் கொடுத்தால் சப்பாத்தி உப்ப உதவும், ஆனால் ஓட்டை விழாமல் பார்த்துக் கொள்ளவும்.
சப்பாத்திகள் சுட்டு முடிந்ததும், அவற்றை ஒரு சூடான ஹாட் பாக்ஸில் வைக்கவும். ஹாட் பாக்ஸ் மூடியை முழுவதுமாக மூடாமல், சிறிது இடைவெளி விட்டு வைத்தால் சப்பாத்திகள் சூடாகவும், மென்மையாகவும் இருக்கும். மாவு பிசைய வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தினால் சப்பாத்தி மிருதுவாக வரும்.மாவை குறைந்தது 5-7 நிமிடங்கள் நன்றாகப் பிசைய வேண்டும். இது சப்பாத்தியின் மென்மைக்கு மிகவும் முக்கியம்.
மாவை பிசைந்த பிறகு குறைந்தது 30 நிமிடங்கள் ஊறவிடுவது சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்க உதவும். ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது சப்பாத்தி மென்மையாகவும், நல்ல நிறத்துடனும் வர உதவும். மாவு பிசையும்போதும், சப்பாத்தி சுடும்போதும் எண்ணெய் அல்லது நெய் சேர்ப்பது சப்பாத்தியை மிருதுவாக்கும். சப்பாத்தியை மிதமான தீயில் சுட வேண்டும். அதிக தீயில் சுட்டால் சப்பாத்தி காய்ந்துவிடும். சுட்ட சப்பாத்திகளை சூடாக ஹாட் பாக்ஸில் வைப்பது, அவை நீண்ட நேரம் மென்மையாக இருக்க உதவும்.