/indian-express-tamil/media/media_files/69ouXX7T2xT5HOSGxKgu.jpg)
சமையல் என்பது ஒரு கலை. அதை எல்லோரும் ரசிக்கலாம். சமையலில் சில ரகசியங்களை அறிந்தால், தினமும் சமையல் செய்வது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக மாறும். அதற்காகத்தான் இங்கே சில எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறிப்புகளைப் பயன்படுத்தி உங்கள் சமையலை மேலும் சுவையாகவும், எளிதாகவும் மாற்றி அசத்தலாம்.
டிப்ஸ்1: தக்காளியை வதக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து வதக்குங்கள். இது தக்காளியின் சிவப்பு நிறத்தை அதிகரிப்பதுடன், வட இந்திய உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையையும் கொடுக்கும்.
டிப்ஸ் 2: கீரை சமைக்கும் போது ஒரு கால் டீஸ்பூன் சர்க்கரை சேர்த்தால், கீரை பச்சை பசேல் என்று அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
டிப்ஸ் 3: எந்த வகை ரசம் செய்தாலும், அதை அடுப்பிலிருந்து இறக்கும் முன் ஒரு கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்து, பிறகு கடுகு, கறிவேப்பிலை தாளித்து நெய்யில் சேர்த்தால், ரசம் மிகவும் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 4: உருளைக்கிழங்கு காரக்கறி செய்யும்போது, அரைக்கரண்டி புளிப்பில்லாத தயிர் சேர்த்து வதக்கினால் அதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும். சேனைக்கிழங்கு வாங்கும்போது, அதை உடனடியாக சமைக்காமல், சில நாட்கள் கழித்து சமைப்பது நல்லது. புதிய கிழங்கு சிலருக்கு நமைச்சலை ஏற்படுத்தும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து அல்வா செய்து, சிறிது பாதாம் எஸ்ஸன்ஸ் சேர்த்தால் அசல் பாதாம் அல்வா போலவே இருக்கும்.
டிப்ஸ் 5: இட்லி குக்கர் தட்டில் உள்ள இட்லிகளை சுலபமாக எடுக்க, இட்லித் தட்டைத் திருப்பி அதன் மேல் சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும். இட்லிகள் ஒட்டாமல் சுலபமாக எடுக்க வரும்.
டிப்ஸ் 6: தேங்காய் உடைப்பதற்கு முன் அதை பச்சைத் தண்ணீரில் கழுவிவிட்டு உடைத்தால், அது எளிதாக உடையும்.
டிப்ஸ் 7: மிக்ஸியில் உளுந்து வடைக்கு மாவு அரைக்கும் போது, முதலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அதன் மேல் உளுத்தம் பருப்பைப் போட்டு அரைத்தால், அரைத்த மாவை மிக்ஸியிலிருந்து எளிதாக எடுக்கலாம். உளுந்து வடை செய்யும் போது, சிறிதளவு சேமியாத்தூள் சேர்த்தால் வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
டிப்ஸ் 8: பாசிப்பருப்பு குழைந்து போகாமல் திட்டமாக வேகவைக்க, அதை ஒரு டிபன் பாக்ஸில் போட்டு குக்கரில் வைத்து வேகவைத்தால் போதும்.
டிப்ஸ் 9: கலவை சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கலந்தால், சாதம் கட்டியாக இல்லாமல் இருக்கும். மேலும், அதன் சுவையும் கூடும்.
டிப்ஸ் 10: உப்புமா செய்வதற்கு பதிலாக, ரவை மற்றும் சேமியாவைக் கொண்டு இட்லிகளாக செய்து சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். இது ஒரு வித்தியாசமான சுவையை தரும்.
டிப்ஸ் 11: பெரிய வெங்காயத்தை வட்ட வட்டமாக பஜ்ஜி போடுவதற்குப் பதிலாக, சாம்பார் வெங்காயத்தை உரித்து நீளவாக்கில் இரண்டிரண்டாக நறுக்கி, அதை பஜ்ஜி மாவில் தோய்த்து குட்டி குட்டி பஜ்ஜிகளாக செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
டிப்ஸ் 12: அடுப்பிலிருந்து நெய்யை இறக்கியவுடன், மோரில் நனைத்த கருவேப்பிலையை நெய்யில் போட்டால், கருவேப்பிலையும், மோரும் மொறுமொறுப்பாகி நெய் நல்ல மணம் பெறும்.
டிப்ஸ் 13: எல்லா காய்கறிகளையும் பொடிப் பொடியாக நறுக்கி, தயிர், உப்பு, மற்றும் ஒரு சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காய்கறி பச்சடி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.