நம் வீடுகளில் பெரும்பாலும் காலை, இரவு நேரங்களில் இட்லி, தோசை தான் உணவாக இருக்கும். இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் செய்து சாப்பிடுவோம். எப்போதும் ஒரே மாதிரியாக செய்து சாப்பிடுவது. புதிதாக புதினா மற்றும் தக்காளி சேர்த்த ரெசிபி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
தக்காளி – 3
பெரிய வெங்காயம் – 2
புதினா – அரை கைப்பிடி
வர மிளகாய் – 5
புளி – சிறிதளவு
இஞ்சி – சிறிதளவு
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். புதினா இலைகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை தோல் உரித்து கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுபட்டதும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின் புளி, இஞ்சி சேர்க்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். உப்பு சேர்த்தால் சீக்கிரம் வதங்கி விடும். அதனால் சிறிதளவு உப்பு சேர்க்கவும். அடுத்து புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவும். இப்போது அடுப்பை அணைத்து இந்த பொருட்களை ஆறவிடவும்.
பின்னர் இந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அடுத்ததாக கடாய் வைத்து தாளிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுதாளித்து சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் தக்காளி புதினா சட்னி தயார். சூடான தோசை, இட்லியில் வைத்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/