பாரம்பரியத் தென் தமிழக சமையலில், பெரும்பாலும் பிரியாணிக்கு மாற்றாகப் பரிமாறப்படும் உணவுதான் வெந்தயச் சோறு. தனித்துவமான சுவையும், மணம் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் இதை சிறப்புமிக்க உணவாக மாற்றுகின்றன. வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், மசாலா பொருட்களின் கலவை மற்றும் புதினா, கொத்தமல்லி இலைகளின் புத்துணர்ச்சியூட்டும் நறுமணம் ஆகியவை இணைந்துஇந்த உணவை சிறந்த அனுபவமாக மாற்றுகின்றன. சாதாரணமாகச் செய்யப்படும் சோறு வகைகளைவிட, வெந்தயச் சோறு தனித்துவமான சுவையைக் கொண்டது. இதனை வீட்டிலேயே எப்படி எளிமையாகச் செய்வது என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்: பொன்னி பச்சரிசி - 2 கிலோ, வெந்தயம் - 150 கிராம், வெங்காயம் - 200 கிராம் (நறுக்கியது), தக்காளி - 200 கிராம் (நறுக்கியது), புதினா இலைகள் - ஒரு கைப்பிடி, கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி, பட்டை - 5 கிராம், ஏலக்காய் - 5 கிராம், கிராம்பு - 5 கிராம், பச்சை மிளகாய் - 5, இஞ்சி - 100 கிராம், பூண்டு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு, கடலை எண்ணெய் - 200 மில்லி, நெய் - 200 மில்லி
செய்முறை: முதலில், பொன்னி பச்சரிசியை நன்றாகக் கழுவி ஊறவைக்கவும். அதேபோல, வெந்தயத்தை சிறிது நேரம் ஊறவைத்தால், அதன் கசப்புச் சுவை குறையும். இஞ்சி மற்றும் பூண்டைத் தனித்தனியாக அரைத்து விழுதுகளாக எடுத்துக்கொள்ளவும். பெரிய பாத்திரத்தில் கடலை எண்ணெய் மற்றும் நெய்யை சேர்த்துச் சூடாக்கவும். அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளி, புதினா, மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, தக்காளி குழையும் வரை வதக்க வேண்டும். இப்போது, ஊறவைத்த வெந்தயத்தை மசாலா கலவையுடன் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து, மூடிபோட்டு மிதமான தீயில் வேகவிடவும். அரிசி வெந்ததும், தீயை முற்றிலும் குறைத்து, சோற்றை 'தம்' போடவும். சிறிது நேரம் கழித்து, சோறு உதிரி உதிரியாக வெந்திருக்கும். சுவையான வெந்தயச் சோற்றை, வெங்காயத் தயிர் பச்சடி அல்லது கறிக்குழம்பு போன்ற சைடு டிஷ்களுடன் பரிமாறலாம்.