/indian-express-tamil/media/media_files/2025/08/17/uppu-kari-2025-08-17-19-15-11.jpg)
எல்லாத்துக்கும் ஏற்ற டிஷ்... காரசாரமான உப்பு கறி!
தென் மாவட்டங்களில் மிகவும் பிரபலமான தனித்துவமான உணவு வகைதான் உப்பு கறி. இது மற்ற சிக்கன் ரெசிபிகளைப் போல கிரேவியாக இல்லாமல், கறியின் உண்மையான சுவையும், காரமும் முழுமையாக வெளிப்படும் வகையில் சமைக்கப்படும் ஸ்பெஷல் டிஷ். குறைந்த மசாலா பொருட்களையும், அதிக மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் கொண்டு இந்த உப்பு கறி தயாரிக்கப்படுகிறது. வீட்டில் சுலபமாக எப்படி காரசாரமான உப்பு கறி செய்வது என்று பார்க்கலாம்.
உப்பு கறி செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன் - 500 கிராம், காய்ந்த மிளகாய் - 10 முதல் 15 (அல்லது காரத்திற்கு ஏற்ப), வெங்காயம் - 2 பெரியது, இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி, மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசறி தனியாக வைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ உடைத்து வைத்துக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், அதில் உடைத்து வைத்த காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். மிளகாய் சற்று சிவந்து வரும்போது நல்ல வாசனை வரும். இப்போது நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அடுத்து, பிசறி வைத்த சிக்கன் துண்டுகளை பாத்திரத்தில் சேர்த்து, நன்கு கிளறவும். சிக்கன் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். சிக்கனில் இருந்து தண்ணீர் வெளிவரத் தொடங்கும். அப்போது, தேவையான அளவு உப்பு சேர்த்து (உப்பு ஏற்கனவே சேர்த்திருப்பதால் கவனமாக சேர்க்கவும்), பாத்திரத்தை ஒரு மூடி கொண்டு மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். சிக்கன் தன் நீரிலேயே நன்கு வேகும். சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதிக தீயில் வைத்து தண்ணீரை வற்ற விடவும். தண்ணீர் முழுமையாக வற்றிய பிறகு, மிளகுத்தூளைச் சேர்த்து, நன்கு கிளறி சில நிமிடங்கள் வதக்கவும். இப்போது காரசாரமான உப்பு கறி தயார்! இதனை சூடான சாதம், இட்லி அல்லது தோசையுடன் பரிமாறி உண்ணலாம்.
இந்த உப்பு கறியில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகு ஆகியவை ஒரு தனித்துவமான சுவையையும், காரத்தையும் கொடுக்கும். இது கிரேவியாக இல்லாமல், உதிரியாக இருப்பதால் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்லவும் ஏற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.