ஒவ்வொரு வகை மிளகாய்க்கும் சில தன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் குழம்பு ருசியாக இருக்க எந்த வகையான மிளகாயை பயன்படுத்த வேண்டும் என்றும், மல்லிப் பொடியை எவற்றுடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம் என்றும் இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
காஷ்மீர் மிளகாய் பார்ப்பதற்கு சுருக்கங்களுடன் காட்சியளிக்கும். இவற்றில் காரம் அதிகமாக இருக்காது. 95 சதவீதம் இது சிவப்பு வண்ணம் கொடுக்கும் வகையில் மட்டுமே இருக்கும். 5 சதவீதம் மட்டுமே இதில் காரம் இருக்கும்.
இதேபோல் குண்டு மிளகாய் அல்லது நாட்டு மிளகாய் என்ற ஒரு வகையும் உள்ளது. குழம்பில் காரம் அதிகமாக வேண்டும் என நினைப்பவர்கள் இதனை பயன்படுத்துவார்கள். இதேபோல், பார்ப்பதற்கு நீளமாக இருக்கும் ஒரு மிளகாய் வகை உண்டு. இந்த வகை மிளகாயில் அதிகமாக காரமும் இருக்காது, நிறமும் இருக்காது. இதன் காம்புகளை அகற்றிவிட்டு பாக்கெட்டுகளில் இதனை விற்பனை செய்கின்றனர்.
இது தவிர கர்நாடகா மிளகாய் என்ற ஒரு வகை இருக்கிறது. இது பெரிய அளவில் நிறத்தை கொடுக்காது. இதில் சிறிதளவு தான் காரமும் இருக்கும். மேலும், மெலிசான ஒரு வகை மிளகாய் இருக்கிறது. இது அதிகப்படியான காரம் கொடுக்கக் கூடியது. 4 மிளகாய்கள் போட வேண்டிய இடத்தில், இதில் ஒன்றை மட்டும் பயன்படுத்தினால் போதும்.
மிளகாய்கள் வளரும் போது அதில் இருந்து Aflatoxin என்ற கொடிய நச்சுத்தன்மை உருவாகும். இது இருக்கும் மிளகாயை சாப்பிட்டால் கேன்சர் பாதிப்பு வரும் எனக் கூறப்படுகிறது. மிளகாய்களில் பழுப்பு நிறத்தில் வெள்ளைபூத்தது போன்று இருந்தால், அவற்றை பயன்படுத்தக் கூடாது. அத்தகைய மிளகாய்களில் Aflatoxin இருக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
மேலும், மிளகாய் அரைப்பதில் சில வழிமுறைகள் இருக்கின்றன. நாம் எடுத்துக் கொள்ளும் காரத்திற்கு ஏற்ற மிளகாயை ஒரு பங்கும், நிறம் கொடுக்கக் கூடிய காஷ்மீர் மிளகாயை ஒரு பங்கும் சேர்த்து அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காரம் மற்றும் நிறம் ஆகிய இரண்டுமே கிடைத்து விடும்.
மேலும், மல்லி வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சில மல்லி பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். சில வகை மல்லி கருமை நிறத்தில் இருக்கும். அதன்படி, வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லியை வாங்கக் கூடாது என சமையல் கலை வல்லுநர்கள் கூறுகிறார்கள். கருமை நிறத்திலான மல்லியை வாங்கும் போது தான் அவை நல்ல நறுமணத்தை தரும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
மேலும், குழம்பு ருசியாக இருப்பதற்கு சில டிப்ஸும் இருக்கிறது. மிளகாய் அரைக்க எடுத்துச் செல்லும் போது அத்துடன் சேர்த்து சிறிது பச்சரிசியையும் வறுத்து கொண்டு செல்லலாம். இவை இரண்டையும் சேர்த்து அரைத்து எடுத்த பொடியை குழம்பில் பயன்படுத்தினால், அவை கூடுதல் ருசியாக இருக்கும்.
இதற்காக குழம்பு பொடி அரைப்பதற்கு முன்பு, ஒரு கிலோ வரமிளகாய், ஒன்றரை கிலோ மல்லி, 100 கிராம் பச்சரிசி, 200 கிராம் கடலை பருப்பு மற்றும் துவரம் பருப்பு, 50 கிராம் சீரகம், கடுகு, மிளகு மற்றும் சுக்கு, காய வைத்து எடுத்த கறிவேப்பிலை, மஞ்சள் ஆகிய அனைத்தையும் வறுத்து, பின்னர் அரைத்தால் குழம்பு பொடி ருசியாக இருக்கும்.
மேலும், மல்லித்தூள் மட்டும் அரைக்க வேண்டுமென்றால் அத்துடன் மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியை குழம்பிற்கு பயன்படுத்தினால் நல்ல மனமாக இருக்கும்.