ஒரு வீட்டின் பெரும்பாலான நேரத்தை சமையல் பணியே எடுத்துக் கொள்ளும். காலை டீ போடுவதற்காக கிச்சனில் நுழைந்தால் இரவு உணவு சமைத்த பின்னர் தான் வெளியே வர முடியும். அந்த வகையில் நம்முடைய கிச்சன் பணிகளை ஈஸியாக மாற்றும் சில டிப்ஸ்களை இந்தப் பதிவில் காணலாம்.
அனைவரது வீடுகளிலும் இட்லி, அடை தோசை போன்றவற்றுக்கு மாவு தயாரித்து ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை கடைபிடிப்போம். அடுத்த முறை இதனை செய்யும் போது ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதனுள் கால் பங்கு தண்ணீர் நிரப்பி, இந்த பெரிய பாத்திரத்திற்குள் மாவு பாத்திரத்தை வைக்கலாம். இதனால், கூடுதலாக சில நாட்களுக்கு மாவு புளிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.
அடிக்கடி வைக்கும் சாம்பாரின் சுவையை கூட்டுவதற்கு ஒரு சிம்பிளான ட்ரிக்கை பயன்படுத்தலாம். அதன்படி, பஜ்ஜி செய்வதற்கு பயன்படும் மாவை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து குளிர்ந்த தண்ணீரில் கரைக்க வேண்டும். இந்தக் கரசலை சாம்பார் கொதிக்கும் போது ஊற்றினால் கூடுதல் சுவையாக இருக்கும்.
பெரும்பாலும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்திய பின்னர் அவற்றை தூக்கி வீசி விடுவோம். இனி அப்படி செய்ய வேண்டாம். இந்த தோல்களை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடலாம். அதன்படி, வீட்டில் புதிதாக குக்கர் வாங்கும் போது, தினமும் இந்த எலுமிச்சை தோலின் ஒரு துண்டை அதில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வைக்கலாம். இப்படி செய்தால் குக்கரின் உட்புறம் நிறம் மாறாமல் இருக்கும்.
ஐந்து நிமிடங்களில் கேரட் மில்க் ஷேக் செய்வதற்கு ஒரு அருமையான வழி இருக்கிறது. இதற்காக கேரட் வாங்கியதும் அதனை தோல் சீவி குக்கரில் வேக வைக்க வேண்டும். அதன் பின்னர், இவை ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரீசரில் வைத்து விடலாம். இனி தேவைப்படும் போது இந்தக் கேரட் துண்டுகளை எடுத்து பால், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் மில்க் ஷேக் தயாராகி விடும்.