ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரை கீரை துவையல் செய்து வாரம் ஒரு முறையாவது சாப்பிடுங்கள் என்று கூறும் பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் வல்லாரை கீரை துவையல் செய்வது எப்படி என்று செய்து காட்டியுள்ளார்.
கொங்குநாடு அடையுடன் வல்லாரை கீரை துவையல் செய்யும் முறையை செஃப் வெங்கடேஷ் பட் கூறியுள்ளார்.
கொங்குநாடு ஸ்பெஷல் அடை செய்வதற்கு, முதலில் 50 கிராம் துவரம் பருப்புடன் 200 கிராம் பச்சரிசியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை இறுத்துவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன், அரை டேபிள்ஸ்பூன் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். இதை ஒரு மிக்சியில் போட்டு அரையுங்கள். தூளாக அரைந்திருக்கும். இப்போது 3 டேபிள்ஸ்பூன் தண்ணீர் விட்டு கொரகொர என்று அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஒரு கப் தேங்காய், 10 சின்ன வெங்காயம், 6 வர மிளகாய் எடுத்துக்கொள்ளுங்கள். மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பிறகு, 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றி அரைத்து ஒரு பவுலில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதை, ஏற்கெனவே அரைத்து வைத்த துவரம்பருப்பு, பச்சரி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலந்துவிடுங்கள். இது ஒரு கால் மணி நேரம் ஊறட்டும்.
வல்லாரை கீரை துவையல் செய்வதற்கு, வல்லாரை கீரை ஒரு கட்டு காம்புகளை நீக்கிவிட்டு இலைகளை மட்டும் பறித்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள், ஒரு வானலியை எடுத்து வையுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் ஒரு 6 காய்ந்த மிளகாய் போடுங்கள். 1 ஸ்பூன் கடுகு போடுங்கள். கடுகு பொறிந்ததும் 2 ஸ்பூன் மிளகு போடுங்கள். 1 கொத்து கருவேப்பிலை போடுங்கள். ஒரு உள்ளங்கை அளவு கடலைப் பருப்பு போடுங்கள். 1 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
இப்போது, சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரைக் கீரையை எடுத்து போடுங்கள். பச்சைத் தன்மை போகிற அளவுக்கு நன்றாக வதக்குங்கள். வதங்கியதும், கேஸ் ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு, ஒரு கை தேங்காய் துருவலைப் போடுங்கள். கொஞ்சம் புளி போடுங்கள். நன்றாகக் கிண்டி விடுங்கள். கடாயில் இருக்கிற சூட்டிலேயே கிளறிவிடுங்கள், தேவையான அளவு உப்பு போடுங்கள். நன்றாகக் கிளறிவிடுங்கள்.
இதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் ஊற்றாமல் ஒரு ரெண்டு ஓட்டு ஓட்டுங்கள். பொடியாக அரைந்த பிறகு, ஒரு 50 மில்லி தண்ணீர் ஊற்றி, நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் வல்லாரைக் கீரை துவையல் தயார்.
இப்போது கொங்குநாடு ஸ்பெஷல் அடை செய்வதற்கு அரைத்து வைத்துள்ள மாவை எடுத்து, ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, உள்ளங்கை அகலத்துக்கு அடையாக தட்டி, எண்ணெயில் போட்டு உப்பி வரும்போது நன்றாகப் பொரித்து எடுங்கள். அவ்வளவுதான் கொங்குநாடு ஸ்பெஷல் அடை தயார்.