அசைவ உணவு பிரியர்களுக்கு பிடித்தமான சிக்கன் வறுவல் போல, சைவ பிரியர்களும் அதே சுவையில் மகிழக்கூடிய ஒரு அற்புதமான ரெசிபிதான் இந்த 'சோயா சிக்கன் வறுவல்'. சோயா சங்க்ஸை வைத்து எளிதாகவும் சுவையாகவும் எப்படி இந்த உணவு வகையைத் தயாரிப்பது என்று மைசெல்ஃப் டைம் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சோயா சங்க்ஸ்
சீரகம்
சோம்பு
மிளகு
கொத்தமல்லி
பட்டை
ஏலக்காய்
கல்பாசி
காய்ந்த மிளகாய்
எண்ணெய்
சீரகம் (தாளிக்க)
சிறிய வெங்காயம்
கறிவேப்பிலை
காஷ்மீரி மிளகாய் தூள்
மஞ்சள் தூள்
கொத்தமல்லி தூள்
உப்பு
இஞ்சி பூண்டு விழுது
செய்முறை:
முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், சோயா சங்க்ஸ்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். இது சோயா சங்க்ஸை மிருதுவாக்கும்.
ஒரு வாணலியில் சீரகம், சோம்பு, மிளகு, கொத்தமல்லி, பட்டை, ஏலக்காய், கல்பாசி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக அல்லது ஒன்றாக சேர்த்து நன்றாக வறுக்கவும். வறுத்த மசாலாப் பொருட்களை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சிறிதளவு சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர், பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
வதங்கிய வெங்காயத்துடன் காஷ்மீரி மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை அரை நிமிடம் வதக்கவும். பின்னர், வேகவைத்து வைத்திருக்கும் சோயா சங்க்ஸை சேர்த்து, மசாலா சோயாவுடன் நன்றாக கலக்கும்படி மேலும் அரை நிமிடம் வதக்கவும்.
இப்போது இஞ்சி பூண்டு விழுது மற்றும் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேர்த்து, சோயா சங்க்ஸ் மீது மசாலா நன்றாக படியும் வரை கிளறவும்.
அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து, மசாலா சோயா சங்க்ஸில் நன்றாக கலக்கும்படி ஒரு முறை கிளறி விடவும். பின்னர், கடாயை மூடி, ஐந்து நிமிடங்கள் குறைந்த தீயில் சமைக்கவும். அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்க கிளறி விடவும். சோயா மசாலாவுடன் கலந்து, கிரேவி கெட்டியாகும் வரை சமைக்கவும்.
சுவையான மற்றும் ஆரோக்கியமான 'சோயா சிக்கன் வறுவல்' தயார்! இந்த சைவ ரெசிபி அசைவ உணவுகளை விரும்பும் நண்பர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக அமையும்.