சப்பாத்திக்கு எப்போதும் உருளைக்கிழங்கு, பன்னீர் செய்து சாப்பிடுவோம். எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவது சலிப்பாக இருக்கும். இங்கு சப்பாத்திக்கு ஏற்ற சுவையான வெஜிடபிள் மசாலா குழம்பு செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 2
கேரட் – 1
உருளைக்கிழங்கு – 2
காலிஃப்ளவர் சிறியது – 1
பீன்ஸ் – 10
பச்சை பட்டாணி – அரை கப்
இஞ்சி சிறிய துண்டு – 2
பச்சை மிளகாய் – 3
முந்திரி பருப்பு – 15
எண்ணெய் – 5 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
பட்டை சிறிய துண்டு – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
உப்பு – 1 ஸ்பூன்
தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லித்தழை – 1 கைப்பிடி
செய்முறை
முதலில் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்கறிகளை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் இவற்றை வேறு ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதே கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா நன்றாக வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக வதக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து கிளறவும். இப்போது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும். காய்கறிகள் நன்றாக வதங்கியதும் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான வெஜிடபிள் மசாலா குழம்பு தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/