புளிக்குழம்பு என்றாலே பலருக்கும் பிடித்த ஒரு உணவு. ஆனால், வெண்டைக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த புளிக்குழம்பு, அதன் சுவையால் மீன் குழம்பையும் மிஞ்சும் அளவுக்கு அற்புதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று காத்துவாக்குல சமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்க்கலாம். இந்த குழம்பு செய்யும்போதே வீடே மணக்கும் அளவிற்கு இருக்கும். மதிய நேரம் சாதம் போட்டு ஒரு பொறியலோடு சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய்
எண்ணெய்
வெந்தயம்
சோம்பு
சின்ன வெங்காயம்
பூண்டு பல்
பச்சை மிளகாய்
கறிவேப்பிலை
பழுத்த தக்காளி
உப்பு
தனி மிளகாய் தூள்
குழம்பு மசாலா
புளி
துருவிய தேங்காய்
சீரகம்
செய்முறை:
முதலில், ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, வெண்டைக்காயை நன்கு வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் மேலும் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெந்தயம் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் இரண்டு பழுத்த தக்காளியை சேர்த்து நன்கு மசிய வதக்கவும். தக்காளி வதங்கியதும், உப்பு, தனி மிளகாய் தூள், குழம்பு மசாலா சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும். ஒரு எலுமிச்சை அளவு புளியை வெந்நீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து, மசாலாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு மிக்ஸர் ஜாரில், துருவிய தேங்காய், இரண்டு பல் பூண்டு, சீரகம், மீதமுள்ள சோம்பு (1/2 டீஸ்பூன்), மற்றும் ஒரு பழுத்த தக்காளி சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த விழுதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து குழம்புடன் கலந்து கொதிக்க விடவும். குழம்பு ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்த வெண்டைக்காயைச் சேர்த்து நன்கு கலந்து, ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து விடவும். சுவையான வெண்டைக்காய் புளிக்குழம்பு தயார்! இதை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.