மருத்துவக் குணமிக்க வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. நீங்கள் வெந்தயக் குழம்பு வைக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வெந்தயக் குழம்பு செய்தால் செம டேஸ்ட்டாக இருக்கும். செய்து பாருங்கள்.
வெந்தயம் மருத்துவக் குணம் வாய்ந்தது. அனைத்து வீடுகளின் சமையலறையிலும் இடம்பெற்றிருக்கும் வெந்தயத்தைப் பயன்படுத்தி வெந்தயக் குழம்பு வைக்கப்படுகிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. மேலும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். ஆனால், அந்த வெந்தயக் குழம்பு சுவையாக செய்வது எப்படி என்று தெரியவில்லையா கவலைப்பட வேண்டாம். மணமணக்கும் செம டேஸ்டான வெந்தயக் குழம்பு செய்வது எப்படி என்று இங்கே தருகிறோம்.
இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கா முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம் நறுக்கியது
2 தக்காளி நறுக்கியது
1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
2 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
2 தேங்காய் சில்
1/4 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
உப்பு தேவையான அளவு
1 கொத்து கொத்த மல்லி
தாளிக்க 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1/2 டேபிள் ஸ்பூன் கடுகு
1 கொத்து கருவேப்பிலை
செய்முறை
முதலில் வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து அதனை மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
புளியை தேவையான அளவிற்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காயை நன்கு மை போல் அரைத்துக் கொள்ளுங்கள். பின் குழம்பு வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்க வேண்டும். பின் கடுகு பொறிந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி வதங்கி நன்கு மசிந்து விட வேண்டும். அதற்காக தக்காளியுடன் உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காயையும் அதில் சேர்த்து வதக்கவும்.
பின்னர், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை கொட்டி கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து சுண்டிய நிலையில் அரை தேக்கரண்டி வெந்தயத் தூளை சேர்த்து கொதிக்க விடவும். வெந்தயத் தூளை அதிகமாக சேர்த்து விடவும் கூடாது. குழம்பு அதிகமாக கொதித்து விடவும் கூடாது.
ஏனென்றால், வெந்தயக் குழம்பு கசந்து விடும். எனவே, வெந்தயக் குழம்பை இறக்குவதற்கு 5 நிமிட நேரத்திற்கு முன்பு வெந்தயத் தூளை போட்டு கொதிக்க விட்டு கறிவேப்பிலை, கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்.
நீங்களும் இப்படி வெந்தயத்தைப் பொன்னிறமாக வறுத்து பொடி செய்து வெந்தயக் குழம்பு செய்து பாருங்கள் செம டேஸ்ட்டாக இருக்கும். தவறாமல், ட்ரை பண்ணி பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“