பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், இந்த மழைக் காலங்களில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவே மருந்து என மருந்து குழம்பு வைப்பது எப்படி என்று செய்துகாட்டியிருக்கிறார்.
விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி, சன் டிவியின் டாப் குக்கு டுப் குக்கு ஆகிய நிகழ்ச்சிகளின் நடுவர் சமையல் கலைஞர் செஃப் வெங்கடேஷ் பட், இந்த மழைக் காலங்களில் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் வராமல் இருக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்து குழம்பு வைப்பது எப்படி என தனது ‘வெங்கடேஷ் பட்ஸ் இதயம் தொட்ட சமையல்’ யூடியூப் சேனலில் செய்து காட்டியுள்ளார்.
மருந்து குழம்பு வைத்து ஏன் சாப்பிட வேண்டும் என்பது குறித்து வெங்கடேஷ் பட் கூறுகையில், பொதுவாக ஏப்ரல், மே கோடைக்காலம் முடிந்து ஜூன் ஜூலையில் மழைக் காலம் தொடங்கும்போது அதாவது பருவநிலை மாறும்போது வைரஸ்களின் தாக்கம் இருக்கும். இந்த வைரஸ்கலால், வைரஸ் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், ஜலதோஷம், மூச்சுத் திணறல், நுரையிரல் பிரச்னை என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது ஒரு காரணம் என்று கூறுகிறார்.
அதனால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 1000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மக்கள் சமைத்து சாப்பிட்ட மருந்து குழம்பு வைப்பது எப்படி என்று வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
தேவையான பொருட்கள்:
மிளகு 1 1/2 மேசைக் கரண்டி, மஞ்சள் கடுகு 1 1/4 மேசைக்கரண்டி, சீரகம் 2 மேசைக் கரண்டி, கண்ட திப்பிலி 6 குச்சிகள், மஞ்சள் தூள் 1 மேசைக் கரண்டி, மிளகாய் தூள் 1 மேசைக் கரண்டி, பூண்டு ஒரு கைப்பிடி அளவு, வெங்காயம் 2, தக்காளி 2, கடுகு சிறிதளவு, நல்லெண்ணெய், 50 கிராம் புளி, இடித்த வெல்லம் 1 மேசைக் கரண்டி, பெருங்காயம் 1 மேசைக் கரண்டி, 50 கிராம் புளியை 100 மில்லி தண்ணீரில் ஊறவைத்து புளிக் கரைசல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை
கணமான ஒரு பான் எடுத்துக்கொள்ளுங்கள், ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். 1 1/2 மேசைக் கரண்டி மிளகு போட்டு ஒவ்வொரு மிளகும் பொரியும் அளவுக்கு வறுக்க வேண்டும் அதே நேரத்தில் தீய்ந்து கருகிவிடக் கூடாது. மிளகை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்து, மஞ்சள் கடுகு 1 1/4 மேசைக் கரண்டி அளவு எடுத்துக்கொண்டு கடுகு ஒவ்வொன்றும் பொரியும் அளவுக்கு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து சீரகம் 2 மேசைக் கரண்டியை எடுத்து கருகிவிடாமல் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்,
அடுத்து கண்ட திப்பிலியை தண்ணீரில் கழுவி, சின்ன குச்சிகளாக உடைத்து போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், இந்த கண்ட திப்பிலி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
வறுத்து எடுத்து வைத்த மிளகு, மஞ்சள் கடுகு, சீரகம், கண்ட திப்பிலி ஆகியவற்றை சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பசை போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து, இப்போது வானலியை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடு படுத்திக்கொள்ளுங்கள், நல்லெண்ணெய் 3 மேசைக் கரண்டி ஊற்றுங்கள், எண்ணெய் காய்ந்த பிறகு, கடுகு சிறிதளவு போட்டு பொரிய விடுங்கள், கால் ஸ்பூன் வெந்தயம் போடுங்கள், அடுத்து கரிவேப்பிலை போடுங்கள், அடுத்து, ஒரு கைப்பிடி அளௌ பூண்டுபோட்டு வதக்குங்கள், 2 வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்குங்கள், அடுத்து 2 பெரிய தக்காளியை நறுக்கி சேர்த்து வதக்குங்கள், தங்காளி வெங்காயம் எல்லாம் பொன்னிறமாக வதக்கிய பிறகு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், கோபுரம் அளவுக்கு ஒரு மேசைக் கரண்டியில் மிளாகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள், 50 கிராம் புளியை 100 மில்லி தண்ணீரில் ஊறவைத்து அந்த புளிக் கரைசலை சேர்த்து விடுங்கள். சிறிது கலக்கி விடுங்கள். அடுத்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி 12-15 நிமிடங்கள் மிதமான அனலில் கொதிக்க விடுங்கள்.
நன்றாகக் கொதித்த பிறகு, நாம் அறைத்து வைத்திருந்த மிளகு, மஞ்சள் கடுகு, சீரகம், கண்ட திப்பிலியை பேஸ்ட்டை எடுத்து செர்த்து விடுங்கள், மிதமான தீயில் 1 நிமிடம் கொதிக்க விடுங்கள். 1 மேசைக் கரண்டி ஜக்கிரி அல்லது இடித்த வெல்லத்தை சேர்த்துக் கொள்ளுங்கள், நன்றாக கலக்குங்கள். அடுத்து, 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் போடுங்கள். உடனே கேஸ் ஸ்டவ்வை அனைத்துவிடுங்கள். அடுத்து இஞ்சி துருவியது சிறிதளவு எடுத்து தூவி விடுங்கள். பிறகு, இந்த குழம்பை 10 நிமிடம் மூடி வையுங்கள். அவ்வளவுதான் மருந்து குழம்பு தயார். அசிடிட்டி உள்ளவர்கள் புளிக் கரைசலைக் குறைத்துக் கொள்ளலாம்.
செஃப் வெங்கடேஷ் பட் மழைக் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க் மருந்து குழம்பு வைப்பது எப்படி என்று அவருடைய யூடியுப் சேனலில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.