/indian-express-tamil/media/media_files/2025/08/26/kozhukattai-2025-08-26-18-39-53.jpg)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக ஊட்டச்சத்து நிறைந்த முருங்கைக்கீரை, கேரட் பிடி கொழுக்கட்டை எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம். பிள்ளைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுங்கள் சத்தானதாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி - 2 கிண்ணம் (உடைத்த ரவை)
கேரட் - 2 (துருவியது)
தேங்காய் - 1 பெரியது (துருவி பால் எடுத்தது)
முருங்கைக்கீரை - 2 கப் (ஆய்ந்தது)
இஞ்சி-பச்சை மிளகாய் விழுது - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை வேர்க்கடலை - 1 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கைக்குத்தல் அரிசியை எடுத்து, உப்புமாவுக்குப் பயன்படுத்தும் ரவை போல உடைத்துக் கொள்ளவும். பிறகு, ஒரு தேங்காயை உடைத்து துருவி, கெட்டியான தேங்காய்ப்பால் எடுத்து தனியாக வைக்கவும்.
முருங்கைக்கீரையை தண்ணீரில் நன்றாக அலசி, தண்ணீர் வடித்து வைக்கவும். கேரட்டின் தோலை சீவி, துருவித் தயாராக வைக்கவும். அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் பச்சை வேர்க்கடலையைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி, அலசி வைத்த முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்கவும். கீரை வதங்கியதும், துருவிய கேரட்டையும் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வதக்கவும். இத்துடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும், உடைத்து வைத்திருக்கும் அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, தேவையான உப்பையும் சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். மாவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து, அதை சற்று ஆறவிடவும்.
மாவு வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்போதே, சிறு உருண்டைகளாகப் பிடித்து, உள்ளங்கையில் பிடித்து அழுத்தி பிடி கொழுக்கட்டைகள் போல வடிவம் செய்யவும். இந்தக் கொழுக்கட்டைகளை இட்லி தட்டில் வைத்து, ஆவியில் சுமார் 10-15 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை-கேரட் பிடி கொழுக்கட்டை தேங்காய் அல்லது தக்காளிச் சட்னியுடன் சேர்த்துச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.