Vinayagar Chathurthi 2024: இந்து புராணங்களின்படி, விநாயகப் பெருமான் முழுமுதற் கடவுளாக வணங்கப்படுகிறார். விநாயகர் சதூர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதூர்த்தி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். இந்த விநாயகர் சதூர்த்திக்கு பிடிக் கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். இந்த பிடிக் கொழுக்கட்டையில், சிலருக்கு காரக் கொழுக்கட்டை பிடிக்கும், சிலருக்கு இனிப்பு கொழுக்கட்டை பிடிக்கும். அதனால், 2 வகையான கொழுக்கட்டையும் செய்வது எப்படி என்று இங்கே தருகிறோம்.
கார கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள்:
1 கப் கொழுக்கட்டை அரிசி மாவு
2 கப் தண்ணீர்
1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது.
சிறிதளவு கறிவேப்பிலை நறுக்கியது
கொத்துமல்லி நறுக்கியது சிறிதளவு
1 டீஸ்பூன் உப்பு
அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள்
ஒன்றரை டீஸ்பூன் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
இனிப்பு கொழுக்கட்டை செய்யத் தேவையான பொருட்கள்:
1 கப் கொழுக்கட்டை அரிசி மாவு
2 கப் தண்ணீர்
1 டீஸ்பூன் கடலைப் பருப்பு
அரை கப் அல்லது முக்கால் கப் வெல்லம்
1 டீஸ்பூன் உப்பு
2 பச்சைநிற ஏலக்காய்
1 டீஸ்பூன் நெய்
1 டீஸ்பூன் எள்
கார பிடி கொழுக்கட்டை செய்முறை:
ஸ்டவ்வை பற்ற வைத்து, அதில் வானலியை வையுங்கள். பிறகு, வானலியில் 1 டீ ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கடுகு பொறிந்ததும், 1 மேசைக் கரண்டி கடலைப் பருப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு சிவக்க வறுக்க வேண்டும். கருகிவிடக் கூடாது.
அடுத்து, ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி, பொழியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், அதே போல, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக்கொள்ள வேண்டும். கால் டீஸ்பூன் அளவுக்கு பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும். இதையெல்லாம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்குங்கள். அடுத்து, கால் கப் அளவு நன்றாகத் துருவிய தேங்காய் தூளை சேர்த்துக்கொள்ளுங்கள். இவற்றை 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு, கொழுக்கட்டை செய்ய அரிசி மாவு எடுத்த அதே கப் அளவு, 2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
தளதளனு கொதித்ததும் கொழுக்கட்டை மாவை சேர்த்து கலக்க வேண்டும். தீயை சிம்மில் வைத்து கிளர வேண்டும். நன்றாகக் கிளறியபிறகு, மாவு கையில் ஒட்டாமல் வர வேண்டும். இதுதான் பக்குவம், பிறகு, அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் இருக்கமாக மூடி வைத்துக்கொள்ளுங்கள்.
இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்முறை:
இனிப்பு பிடி கொழுக்கட்டைக்கு வெல்லதை கரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். 1 கப் அளவு அரிசி மாவு, ஒரு கப் அரிசி மாவுக்கு அரை கப் அளவு பொடிச்ச வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் இனிப்பாக வேண்டும் என்றால் முக்கால் கப் சேர்த்துக்கொள்ளலாம்,
ஸ்டவ்வில், வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் ஸ்டவ்வில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். மிதமான அனலில், வெல்லத்தைக் கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வெல்லக் கரைசலை, எந்த பாத்திரத்தில் மாவு கலக்கப்போகிறோமோ அந்த பாத்திரத்தில் வடிகட்டி ஊற்ற வேண்டும்.
இப்போது, வடிகட்டிய வெல்லக் கரைசலை ஸ்டவ்வில் தீயை சிம்மில் வைத்து காய வைக்க வேண்டும். இப்போது துருவிய தேங்காய் கால் கப் அளவு அதில் சேர்க்க வேண்டும்.
வேக வைத்த கடலைப் பருப்பு ஒரு மேசைக்கரண்டி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்றாக வறுத்த எள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து, 2 பச்சை நிற ஏலக்காயை பொடித்து சேர்க்க வேண்டும்.
மிகவும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.
1 டீஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரை கொதிக்க விடுங்கள். கொதி வந்தபின், கொதிக்கத்தொடங்கியதும். அரிசி மாவை சேர்த்து கிளறுங்கள். மாவு கையில் ஒட்டக்கூடாது. இதுதான் பக்குவம்.
இந்த மாவை எடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் வைத்து டைட்டாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், ஈரத்துணி வைத்து மூடி வையுங்கள்.
இதையடுத்து, ஏற்கெனவே, காரக் கொழுக்கட்டைக்கு எடுத்து வைத்த மாவைப் பிசைந்து, கையில் லேசாக எண்ணெய் தடவி உங்களுக்கு தேவையான அளவில் கொழுக்கட்டையாக பிடித்து வையுங்கள். மாவு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும், இதுதான் பக்குவம்.
அதே போல, இனிப்பு கொழுக்கட்டைக்கு எடுத்து வைத்த மாவை லேசாக நெய் சேர்த்து, உங்களுக்கு தேவையான அளவில் கொழுக்கட்டையாக பிடித்து வையுங்கள். மாவு கையில் ஒட்டாமல் இருக்க வேண்டும், இதுதான் பக்குவம்.
காரக் கொழுக்கட்டையைத் தனியாக ஒரு இட்லி பாத்திரத்திலும், இனிப்பு கொழுக்கட்டையை தனியாக ஒரு இட்லி பாத்திரத்திலும் வேக வைக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும். கொழுக்கட்டை வெந்த உடன் இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.