/indian-express-tamil/media/media_files/2025/08/26/vinayagar-chadurthi-2025-08-26-15-47-57.jpg)
பண்டிகைக் காலங்களில், குறிப்பாக விநாயகர் சதுர்த்தி அன்று, விநாயகருக்குப் படைக்கப்படும் பிரசாதங்களில் மோதகத்திற்கு ஒரு தனி இடம் உண்டு. அதுவும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு மிகவும் பிடித்தமான இந்த மோதகம், எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய ஒரு இனிப்புப் பலகாரம். இதனை எப்படி செய்வது என்று ரேகாஸ்குசினா இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். நாளை விநாயகர் சதுர்த்திக்கு இந்த மோதகத்தை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி
பாசிப்பருப்பு
வெல்லம்
தேங்காய்
ஏலக்காய்
உப்பு
செய்முறை:
முதலில், இந்த மோதகத்தின் மாவு தயாரிப்பிலிருந்து தொடங்குவோம். ஒரு கப் பச்சரிசியையும், அரை கப் பாசிப்பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பின்னர், அவற்றை ஒரு சுத்தமான துணியில் பரப்பி, பதினைந்து நிமிடங்கள் உலரவிட வேண்டும். உலர்ந்த பிறகு, அவற்றைச் சூடான கடாயில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுத்து, கொரகொரப்பாக அரைக்க வேண்டும். இதுவே மோதகத்தின் முக்கிய அடிப்படையாகும்.
அடுத்ததாக, ஒரு பெரிய பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி, அது கொதிக்கும்போது, அரைத்த மாவை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து கட்டி தட்டாமல் கலக்க வேண்டும். மாவு கெட்டியானதும், அடுப்பை அணைத்துவிட்டு, பாத்திரத்தை மூடி ஐந்து நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இது மாவை மென்மையாக்க உதவும்.
பின்னர், அரை கப் வெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வெல்லப் பாகு காய்ச்சி அதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன், கால் கப் தேங்காய் துருவல், சிறிது ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்தக் கலவை மோதகத்தின் உள்ளே இருக்கும் சுவையை அதிகரிக்கும். இறுதியாக, கையில் நெய் தடவி, கலவையைப் பிடித்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து எட்டு நிமிடங்கள் ஆவியில் வேகவைத்தால், சுவையான பிள்ளையார்பட்டி மோதகம் தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.