திருமண வீடுகளில் பரிமாறப்படும் உருளை பட்டாணி குருமா தனியொரு சுவையுடன் இருக்கும். அந்தச் சுவையை வீட்டிலேயே கொண்டு வர உதவும் ஒரு எளிமையான செய்முறை பற்றி காத்துவாக்குல சமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். புசுபுசு பூரி மற்றும் சப்பாத்திக்கு இதைவிட சிறந்த ஜோடி இருக்க முடியாது.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
பச்சை பட்டாணி - 1/4 கப்
தாளிக்க:
சமையல் எண்ணெய் - 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2
சோம்பு (பெருஞ்சீரகம்) - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2
அன்னாசிப்பூ - 1
பிரிஞ்சி இலை - 1
பட்டை - 1 சிறிய துண்டு
அரைக்க (மசாலா விழுது):
தேங்காய் - 1/2 கப்
பூண்டு பற்கள் - 5
இஞ்சி - 1 நடுத்தர துண்டு
வேர்க்கடலை - 1 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
கசகசா - 1/4 தேக்கரண்டி
மற்றவை:
புதினா இலைகள் - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
தண்ணீர் - 500 மில்லி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில், தேங்காய், பூண்டு, இஞ்சி, வேர்க்கடலை, பொட்டுக்கடலை, மற்றும் கசகசா ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கைத் தோல் சீவி, சதுரத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை, மற்றும் பட்டை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை கடாயில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 2-3 நிமிடங்கள் நன்கு வதக்கவும். 500 மில்லி தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். கலவையை மூடி வைத்து, உருளைக்கிழங்கு வெந்து குருமா கெட்டியாகும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும். (சுமார் 10-15 நிமிடங்கள்).
குருமா கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும்போது, நறுக்கிய புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி தழையை தூவி ஒருமுறை கிளறி அடுப்பை அணைக்கவும். இப்போது உங்கள் சுவையான கல்யாண வீட்டு ஸ்டைல் உருளை பட்டாணி குருமா தயார். சூடான புசுபுசு பூரி அல்லது மென்மையான சப்பாத்தியுடன் பரிமாறி மகிழுங்கள். இந்தக் குருமா இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.