வீட்ல வெங்காயம் இருக்கா அப்போ உடனே இந்த மாதிரி ஆனியன் மசாலா பிரியாணி செஞ்சு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். அதுமட்டும் இல்லாமல் இந்த மாதிரி வெங்காயம் வைத்து பிரியாணி இதுவரை செய்து இருக்க மாட்டீர்கள். லஞ்ச் பாக்ஸ்க்கு கூட இது செம காம்பினேஷன் ஆகும். சுவையான வெங்காய பிரியாணி எப்படி செய்வது என்று மாலினிகிச்சன் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி
உப்பு
பிரியாணி இலை
ஏலக்காய்
கிராம்பு
சீரகம்
பெரிய வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
பச்சை மிளகாய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
மல்லித்தூள்
கரம் மசாலா
புதினா
கொத்தமல்லி
தயிர்
எண்ணெய்
எலுமிச்சை சாறு
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர், உப்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கிராம்பு, சீரகம் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், ஊறவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்க்கவும். அரிசி 70-80% வெந்ததும் (அழுத்திப் பார்த்தால் உடையும், ஆனால் முழுமையாக வேகாமல்) தண்ணீரை வடிகட்டி, அரிசியை ஒரு தட்டில் பரப்பி ஆற விடவும். இது அரிசி ஒட்டாமல் இருக்க உதவும்.
ஒரு பெரிய கடாய் அல்லது பிரியாணி பாத்திரத்தில் எண்ணெய்/நெய் சேர்த்து சூடாக்கவும். நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்குவது மசாலாவிற்கு சுவை கூட்டும்.
இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா மற்றும் சீரகத்தூள் சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கவும். மசாலா கருகாமல் பார்த்துக்கொள்ளவும்.
புதினா இலைகள் மற்றும் கொத்தமல்லி இலைகளில் பாதி சேர்த்து வதக்கவும். தயிர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறவும். கடாயில் தயாராக உள்ள மசாலாவில் அரிசி போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு காரம் சேர்த்து மூடி வேகவிட்டு எடுத்தால் சுவையான வெங்காய பிரியாணி தயார்.
15-20 நிமிடங்களுக்குப் பிறகு, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை 5-10 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு மூடியைத் திறந்து, பிரியாணியை மெதுவாகக் கிளறி விடவும். அவ்வளவு தான் சுவையான ஆனியன் மசாலா பிரியாணி தயார். இதை ரைதா மற்றும் கத்திரிக்காய் பச்சடியுடன் பரிமாறவும்.