ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 17ஆம் தேதி பிறக்கிறது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் பலவிதமான நிகழ்வுகள் நடக்கிறது. அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி மாதம் என்பதால் பண்டிகைகள் நிரம்பிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை 6 மாதம் தட்சிணாயனம்.
ஆடி மாதத்தில்தான் சந்திரனின் வீடான கடக ராசியில் சூரியன் சஞ்சாரம் செய்கிறார். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் . ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்
ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.
ஆடி மாதத்தில்தான் மழை அதிகரித்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடி 18ஆம் பெருக்குகாவிரி கரையோரங்களில் ஆடிபெருக்கு கொண்டாடப்படுகிறது.