மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் 10-ம் நாள் விழாவான இன்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடந்து முடிந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கொடியேற்றம்,
பட்டாபிஷேகம்
திக் விஜயம்,
மீனாட்சி திருக்கல்யாணம்,
தேரோட்டம்,
எதிர் சேவை
ஆகியவை மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களாகும்.
இதில், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக் விஜயம் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து 17ம் தேதியான இன்று, விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை(ஏப்.18) மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வு நெருங்கி வரும் நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருவதால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.