உங்களின் கணினியில் உள்ள தகவலை வேவு பார்க்க 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவு

10 central agencies : நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் இருக்கும் தகவல்களை கண்காணிக்கவும், பரிமாறப்படும் தகவல்களை பார்க்கவும் மத்திய புலனாய்வு துறை உட்பட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

10 பாதுகாப்பு அமைப்புகள் (10 central agencies) என்னென்ன ?

உளவுத்துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, அமலாக்கத்துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வுத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, தேசிய விசாரணைக் குழு, ரா அமைப்பு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையம் ஆகிய அமைப்புகளுக்கு இந்த அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது மத்திய அரசு.

கணினியின் உரிமையாளர், இந்த அமைப்புகள் கேட்கும் தகவல்களை உடனடியாக தர வேண்டும் என்றும், அப்படி விவரங்களை தர மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது நாள் வரை, ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பப்படும் தகவல்களை மட்டும் தான் வேவு பார்க்க உரிமை அளித்து வந்தது மத்திய அரசு. ஆனால் தற்போது கணினியில் வைத்திருக்கும் தகவல்களைக் கூட பதிவிறக்கம் செய்து கொள்ளும் அதிகாரத்தையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

10 central agencies

நாட்டின் இறையாண்மையை பாதுகாத்தல், பாதுகாப்புத் துறை ரகசியத்தை பாதுகாத்தல், மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் நட்புறவு ஆகிய காரணங்கள் கருதி, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69(1)ன் படி இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினர் கருத்து

தனி மனித உரிமைகளை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close