/indian-express-tamil/media/media_files/2024/11/02/8Yu91lZKMcn3omvGoIjs.jpg)
மத்திய பிரதேச மாநிலம், பாந்தவ்கர் புலிகள் காப்பக பகுதி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான வரகு அரிசியை உட்கொண்டதில், 10 யானைகள் உயிரிழந்தன. அவற்றை அடக்கம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அந்த வேளையில், யானை கூட்டத்தில் உயிர் பிழைத்த ஒரு ஆண் யானை, சம்பவ இடத்திற்கு வந்து தனது நண்பர்களை வழியனுப்புவது போன்று காட்சியளித்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: 10 of its herd dead, lone tusker guards a mass burial in Bandhavgarh reserve
யானைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகில், அவற்றை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் இருந்தனர். தொடர் பணிகளால் சோர்வடைந்த மருத்துவர்களின் செவிகளில், உயிர்பிழைத்த யானையின் அழுகை குரல் மேலும் கலக்கமடையச் செய்தது. “நாங்கள் மனமுடைந்து விட்டோம். எங்களால் உடற்கூராய்வை முறையாக செய்ய முடியாத சூழல் உருவானது. குறிப்பாக, உயிர் பிழைத்திருந்த யானை, மற்ற யானைகளை காப்பாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் இடையூறு ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அந்த யானையை ஜேசிபி இயந்திரம் கொண்டு விரட்டுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை“ என மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
யானையை விரட்ட மிளகாய்களை எரித்து அதன் புகையை பயன்படுத்துமாறு, முன்னாள் வனத்துறை காவலர் புஷ்பேந்திர நாத் திவேதி அறிவுறுத்தி வருகிறார். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் யானைகளை கண்காணித்து வருகிறார்.
“2018-ஆம் ஆண்டில் யானைகள் இப்பகுதிக்கு வந்தன. யானைகளின் இறப்பு பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. உயிர் பிழைத்த யானை, மற்ற யானைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காண வந்து கொண்டே இருக்கிறது. தனது குடும்பத்தை ஒரு முறையாவது பார்த்துவிட முடியுமா என்ற நம்பிக்கையில் அந்த யானை வருகிறது“ என புஷ்பேந்திர நாத் திவேதி கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் இருந்து மற்றொரு 10 வயது நிரம்பிய பெண் யானையும், இரண்டரை வயது யானை குட்டியும் உயிர் பிழைத்தன. அவற்றை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், இவை சேதப்படுத்தி வரும் தானியங்களுக்கு இழப்பீடு தருவதாக விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, நூற்றாண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச பகுதிகளில் யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்ததாக தெரிகிறது. இந்த யானைகளை முஹல் சாம்ராஜ்ஜியத்தினர் போரில் பயன்படுத்த பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இருந்து சிறிய அளவிலான யானைகள், மத்திய பிரதேசத்திற்கு வந்திருக்கலாம் என சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுரங்கங்கள் தோண்டுவதற்காக காடுகளை அழித்தல் உள்ளிட்ட காரணிகளால், வனங்களை விட்டு இவ்வாறு சிறிய நிலப்பரப்புகளுக்கு யானைகள் புலம்பெயர்ந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி ஷாதோல் வனப்பகுதியில் இருந்து பன்பதா எல்லை வழியாக பாந்தவ்கர் புலிகள் காப்பக பகுதிக்கு யானைகள் வந்துள்ளன. இவை அப்பகுதில் இருந்த பயிர்கள் மற்றும் முகாம்களை சேதப்படுத்தின.
இவ்வாறு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரிந்த யானைக் கூட்டம், 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிரந்தரமாக அப்பகுதியில் முகாமிட்டன. யானைக் கூட்டத்தை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. யானைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்காக, கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக புஷ்பேந்திர நாத் திவேதி தெரிவித்துள்ளார்.
2023 காலகட்டத்தில் சுமார் 50 யானைகள் மூன்று குழுக்களாக பிரிந்து, ஷாதோல் வனப்பகுதிகளை சுற்றி வர தொடங்கியதாக வனத்துறையினர் கூறுகின்றனர்.
சமீபத்தில் யானைகளின் உயிரிழப்புக்கு பின்னர், வனவிலங்கு காப்பக நிர்வாகிகளிடம் தொலைபேசி வாயிலாக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.
யானைகளுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் சந்தன், இது குறித்து விரிவாக பேசியிள்ளார். “சத்தீஸ்கர் முதல் மத்திய பிரதேசம் வரை பயிரிடப்பட்டுள்ள வரகு அரிசிகளை யானைகள் சாப்பிடுகின்றன. இவை யானைகள் சாப்பிடுவதற்கு உகந்த உணவு இல்லை. இவற்றை அதிகளவில் சாப்பிடுவதால் யானைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சத்தீஸ்கரின் பல்ராம்பூர், சுராஜ்பூர் ஆகிய பகுதிகளில் வரகு அரிசிகளை சாப்பிட்ட 5 யானைகள் சுயநினைவின்றி இருந்தன. ஆனால், சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் அவற்றை காப்பாற்ற முடிந்தது. இதேபோல், வரகு அரிசி சாப்பிட்ட ஆடுகளும் பாதிக்கப்பட்டன. 5 கிலோவிற்கும் மேல் வரகு அரிசிகளை சாப்பிடும் விலங்குகள், கடும் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்டு, குடலில் இரத்தக் கசிவினால் உயிரிழந்து விடுகின்றன“ என மருத்துவர் சந்தன் தெரிவித்துள்ளார்.
இதையறிந்த சத்தீஸ்கர் வனத்துறையினர், கூடுமானவரை வரகு அரிசிகள் பயிரிடுவதை தவிர்க்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், யானைகளை விரட்ட சூரிய ஒளியினால் இயங்கும் வேலிகள் அமைக்கவும் நிதி உதவி செய்துள்ளனர்.
ஆனால், மத்திய பிரதேசத்தில் இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
“இப்பகுதியில் யானைகளின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு நிதிபற்றாக்குறை உள்ளது. யானைகள் உயிரிழந்த பகுதியில், யானை நண்பர்கள் குழுவினர் ஒருவர் கூட இல்லை. மேலும், ரோந்து பணி செல்பவர்களால் விலங்குகள் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை. உரிய நேரத்தில் சிகிச்சையளித்திருந்தால் யானைகளை காப்பாற்றியிருக்கலாம். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக யானைகள் பராமரிப்பு குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், அதில் என்ன எழுதியிருக்கிறது என்று அப்பகுதி மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையும் சரியான நேரத்தில் வழங்கப்படுவதில்லை. இழப்பீடு சரியாக வழங்கப்பட்டால் கிராம மக்களும் ஒத்துழைப்பு வழங்குவார்கள்“ என மூத்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது, உயிர்பிழைத்திருக்கும் மற்ற யானைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை சுமார் 25 யானைகள் அடங்கிய கூட்டம், வரகு அரிசி பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பு அருகே வந்துள்ளன.
“வரகு அரிசிகளை முற்றிலுமாக அழிப்பது மிகக் கடினம். இதனால் இந்தப் பகுதியில் உள்ள யானைகளுக்கு பெரிய பாதிப்பு உள்ளது. ஆபத்து விளைவிக்கும் பயிர்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். உயிர் பிழைத்த யானைகள், மற்ற யானை கூட்டத்துடன் சேர வேண்டும். ஆனால், அவை உணர்ச்சி வாய்ந்தவை. தனது கூட்டத்திற்கு நிகழ்ந்ததை அவை என்றும் மறக்காது“ என திவேதி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.