தூர்தர்ஷன் டெலிவிஷனில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளதாக பிரபல சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வருணா பந்தாரி பரபரப்பு தகவலை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் இந்திய மகளிர் பத்திரிக்கையாளர் சங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புகழ்பெற்ற சட்ட நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் வருணா பந்தாரி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றியும் , அலுவலகங்களில் மற்றும் பொது இடங்களில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “ ஒருமுறை என்னை சந்திக்க பெண் ஒருவர் வந்திருந்தார். அவர் தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து என்னிடம் பகிர்ந்து அதற்கான தீர்வையும் என்னிடம் கேட்டார். அதன் பின்பு அந்நிகழ்வு குறித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய பல தகவல்கள் எனக்கு தெரிய வந்தது.
டெல்லி, போபால், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களை சேர்ந்த (பெயர் குறிப்பிட முடியாத) 10 பெண்கள் அவர்கள் பணிசெய்து வந்த இடங்களில் சந்தித்த கொடுமைகளும் எனக்கு அப்போது தான் தெரிய வந்தது. இன்னும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல் என்னவென்றால் தூர்தர்ஷனில் பணியாற்றி வந்த பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார்.
அவர்கள் மீது அந்த பெண் தலைமை நிர்வாகத்திடம் குற்றம் சாட்டிய போதும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின்பு அந்த பெண் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மற்றொரு வழக்கு இதை விட விசித்திரமானது, “36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், சக ஊழியர் மீது பாலியல் துன்புறுத்தல் புகாரை முன்வைத்தார். அதற்கு பின்பு அவரின் சம்பளம் தான் பிடிக்கப்பட்டதே தவிர அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அதே போல் 38 வயதாகும் பெண் ஒருவர் தூர்தர்ஷன் ஊழியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்” என்று கூறினார்.
புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனுமான தூர்தர்ஷன் குறித்து வருணா பந்தாரி இப்படியொரு தகவலை பகிர்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், இதுக்குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரி ஷாஷி எஸ் வெம்பதி “பெண்களுக்கு எதிராக இதுப்போன்ற குற்றச்சாட்டுகள் எங்கள் அலுவலகத்தில் நேர்ந்தால் அவற்றை முறைப்படி விசாரித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க என்றும் தவறியதில்லை” என்று தெரிவித்துள்ளார்.