ஆந்திர மாநிலத்தில், ஆதார் அட்டையில் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், அரசு பள்ளியில் படிக்கும் தலித் மாணவி உட்பட 4 மாணவர்கள் அரசு உதவித்தொகை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியொன்றில் 5-வது வகுப்பு படிக்கும் தலித் மாணவி ஜே.இந்து. இவரது பெயர் ஆதார் அட்டையில் ஜே.ஹிந்து (J.Hindu) என தவறுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆதார் அட்டையைக்கொண்டு வங்கி கணக்கு துவங்க முடியாததால் மாணவி இந்துவால் அரசு உதவித்தொகை பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்ற காரணங்களால், மேலும் மூன்று தலித் மாணவர்களுக்கும், ஒரு முஸ்லிம் மாணவருக்கும் அரசு உதவித்தொகை மறுக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் மாணவி இந்துவின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததால், புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. பிறந்த தேதி, புதிய புகைப்படம் மூலம் மறுபடியும் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, புதிய ஆதார் அட்டை வழங்கப்பட்டது. அதிலும், மாணவியின் பெயர் ஹிந்து (Hindu) என்றே அச்சாகியிருந்தது. அதனால், மாணவி இந்துவுக்கு வங்கிக்கணக்கு துவங்க முடியவில்லை. வங்கி கணக்கு துவங்க சரியான பெயருடன் ஆதார் அட்டை இருத்தல் அவசியம். இதேபோல், மேலும் நான்கு மாணவர்களுக்கும் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எஸ்சி/எஸ்.டி, பி.சி வகுப்பினருக்கு ஆண்டுதோறும் அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பிலிருந்து உதவித்தொகையாக ரூ.1,200 வழங்கப்படுவது வழக்கம். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ளவர்களே. அதனால், கிடைக்கும் உதவித்தொகையின் மூலமே மாணவர்கள் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவர். இம்முறை ஆதார் கார்டு காரணமாக 5 மாணவர்கள் அந்த உதவித்தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.