மும்பையில் அமித்ஷா பங்கேற்ற ’மகாராஷ்டிர பூஷண் விருது’ வழங்கும் விழாவில் பங்கேற்ற 11 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள, காரகர் பகுதியில் திறந்த வெளி மைதானத்தில், ’மகாராஷ்டிர பூஷண் விருது’ விழா நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் மத்திய அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு 3 மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 10 லட்சம் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் 300 பேர் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சோர்வடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள், காரகர் அரசு மருத்துவமனைக்கும், நவி மும்பையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கும் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தபோது பேசியதாவது “ இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 11 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்று உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கிறது. பல லட்சம் பேர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஆனால் சிலருக்கு இதுபோன்று நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது கவலை அளிக்கிறது” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர்” விழாவில் காயமடைந்த நபர்களின் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துமனையில் வழங்கப்படும் சிகிச்சையை கண்கானிக்க பன்வல் முனிசிபல் கார்பிரேஷனை சேர்ந்த துணை ஆணையரை நியமித்துள்ளோம். சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாதவாறு அரசு பார்த்துக்கொள்ளும்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் இது தொடர்பாக துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ ’மகாராஷ்டிர பூஷன் விருது விழாவில் கலந்துகொண்ட 11 பேர் உயிரிழந்தது எதிர்பாராத நிகழ்வாக உள்ளது. இது மேலும் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட நபர்களை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பார்த்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத்தை அரசு அறிவித்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் நபர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முதல்வர் தெரிவித்துவிட்டார்” என்று அவர் கூறினார்.
மகராஷ்டிராவின் தொழில் துறை அமைச்சர் உதய் சமத் கூறுகையில் “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 பேர் அபாய கட்டத்தில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அட்டுல் சொல்ந்தே பட்டில் தனது ட்வீட்டில், “வெயில் அதிகமாக இருக்கும் ஏப்ரல் மாதத்தில் இந்த விருது வழங்கும் விழா நடந்துள்ளது. அப்பாவியான 11 பேர் இந்த விழாவில் உயிரிழந்துள்ளனர். இது அரசு தெரிந்தே செய்த கொலை. இதற்கு பாஜக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் மும்பையில் நேற்று அதிகபட்சமாக 34.1 டிகிரி செல்ஷியல் வெயில் பதிவாகி உள்ளது. இதுவழக்கத்தைவிட ஒரு டிகிரி அதிகமான வெயில் நேற்று மும்பையில் பதிவாகி உள்ளது. குறிப்பாக இந்த அரசு விழா நடைபெற்ற இடம் நவி மும்பையில் உள்ளது, இங்கே பதிவான அதிகபட்ச வெயிலின் விவரம், வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் பதிவு செய்யப்படவில்லை.
மகராஷ்ட்ரா காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் சுராஜ் சாவன் கூறுகையில், “ இது அரசின் அலட்சியத்தால் நடைபெற்ற தவறு. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்தே இந்த விழா நடைபெற்றது. பாவப்பட்ட மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர்” என்று அவர் கூறினார்.