11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அப்பீல் செய்யப்பட்டால் தங்கள் கருத்தை கேட்கவேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு செய்தது.
ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது அணியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த இவர்களின் எம்.எல்.ஏ. பதவியை கட்சித் தாவல் தடை சட்டப்படி பறிக்க வேண்டும் என திமுக கொறடா அர.சக்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு, ‘சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது’ என உத்தரவிட்டது. இதையடுத்து ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களும் பதவி நீக்க அபாயத்தில் இருந்து தப்பினர்.
ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு எதிராக இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல திமுக முடிவு செய்தது. இது தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘எங்களின் சட்டப் போராட்டம் தொடரும்’ என அறிவித்தார். எனவே எந்த நேரமும் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்படலாம் என தெரிகிறது.
இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் உள்பட 6 எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘11 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்க வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக யாராவது அப்பீல் செய்தால், எங்கள் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது’ என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ‘ஸ்டே’ வாங்கும் திமுக முயற்சியை ஓபிஎஸ் தரப்பு தடுத்திருப்பதாக கூறலாம்!