தமிழக விவசாயிகள் 111 பேர் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதனை கை விடுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்ட பா.ஜ.க தலைவர்கள், அவர்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்துக் கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள்.
தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர், அய்யாக்கண்ணு இந்தியன் எக்ஸ்பிரஸிடன், யூனியன் மினிஸ்டர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த பா.ஜ.க தலைவர்கள் தங்களை அணுகியதாக தெரிவித்தார்.
மோடிக்கு எதிராக வேட்பு மனுக்களை தாக்கல் செய்து, அகோரி உடையில் பிரச்சாரம் செய்வதே தமிழக விவசாயிகளின் எண்ணம்.
”நாங்கள் அகோரிகளாக அங்கு செல்வோம். நூற்றுக் கணக்கான உள்ளூர் அகோரிகளும் எங்களுடன் இணைந்துக் கொள்வார்கள். விவசாயிகளுக்கு நீதி வேண்டி பிரச்சாரம் செய்வோம்” என்கிறார் அய்யாக்கண்ணு.
தொடர்ந்து பேசிய அவர், ”அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், விவசாயப் பொருட்களுக்கு லாபம் தரும் விலை நிர்ணயம், விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 5,000 ஓய்வூதியம் ஆகியவை ஏற்றுக் கொள்ளப்பட்டு, பா.ஜ.க அறிக்கையில் சேர்க்கப்பட்டால், வாரணாசியில் நாங்கள் போட்டியிடுவதைப் பற்றி மறுபரிசீலனை செய்வோம்” என்கிறார்.
”பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பல பா.ஜ.க தலைவர்கள் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். நாங்கள் மோடி அல்லது எந்த பிற அரசியல்வாதிக்கும் எதிரானவர்கள் அல்ல. எங்கள் கோரிக்கை விவசாயிகளுக்கானது, எங்களுக்கு அரசாங்கக் கொள்கைகளுடன் பிரச்னை.
டெல்லியில் பா.ஜ.க தலைவர் அமித் ஷா எங்களை சந்திப்பார் என்றும், எங்களின் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படி ஒன்று நடந்தால், வாரணாசியில் 111 வேட்பாளர்களைத் திரும்பப் பெற நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என திட்டவட்டமாகக் கூறுகிறார் அய்யாக்கண்ணு.