பீகார் மாநிலத்தில் 12 வயது சிறுவனின் சமயோசித புத்தியால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது.
பீகார் மாநிலம் மங்கல்பூரை சேர்ந்த 12 வயது சிறுவன் பீம் யாதவ். மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் அச்சிறுவன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, ரயில்வே தண்டவாளத்தின் ஒருபகுதி உடைந்திருந்ததை கண்டான், அந்த தண்டவாளத்தை நோக்கி ரயில் ஒன்று வந்துகொண்டிருந்ததை கண்ட அச்சிறுவன், சற்றும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த ந்சிகப்பு நிற டீ-ஷர்ட்டை கழற்றி ரயிலை நோக்கி சென்றான்.
இதனால், சுதாரித்துக்கொண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டார். அந்த உடைந்த தண்டவாளத்தில் ரயில் வந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஆனால், அச்சிறுவனின் சமயோசித புத்தியால் நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஹரேந்திர ஜா கூறுகையில், "மாணவனின் இந்த தைரியத்தை பாராட்டி தக்க சன்மானம் அளிக்கப்படும்", என தெரிவித்தார்.
பீம் யாதவ், தனது வீட்டருகே உள்ள அரசு பள்ளியி 5-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
"அருகாமை கிராமத்திலுள்ள உறவினர் வீட்டுக்கு ஒருமுறை செல்லும்போது, ஒரு சிறுவனின் தைரியம் குறித்து அந்த ஊர் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். நாமும் அதுபோன்று தைரியத்துடன் செய்தால், இந்த சமூகம் நம்மைப்பற்றி பேசும் என விரும்பினேன். பயணிகளின் உயிரைக் காப்பாற்றியதில் மகிழ்ச்சி", என அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.