வேலைவாய்ப்பிற்காக போலி முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்துச் செல்லப்பட்ட 13 இந்தியர்கள் மீட்கப்பட்டு நேற்று (அக்டோபர் 5) சென்னை வந்தடைந்தனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மியான்மரின் கயின் மாநிலத்தில் உள்ள மியாவாடி பகுதியில் இருந்து 13 பேரும் மீட்கப்பட்டனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "மேலும் 13 இந்தியர்கள் இன்று மீட்கப்பட்டு தமிழகம் வந்தடைந்துள்ளனர். மியான்மரில் போலி வேலைவாய்ப்பு மோசடிகளில் சிக்கியுள்ளது குறித்து தீவிரமாக விசாரத்து வருகிறோம். @IndiainMyanmar & @IndiainThailand ஆகிய நாடுகளின் முயற்சிகளுக்கு நன்றி. ஏற்கனவே 32 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.
மியாவாடி பகுதி முழுமையாக மியான்மர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஆயுத ஏந்திய குழுக்கள் அங்கு இருப்பதாக தெரிகிறது.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ள முகவர்களின் விவரங்கள் பல்வேறு மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லாவோஸ் மற்றும் கம்போடியாவிலும் இதேபோன்ற வேலை வாய்ப்பு மோசடி சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வியன்டியன், புனோம் பென், பாங்காக் உள்ள தூதரகம் இந்திய அரசுக்கு உதவி வருகின்றன என்று பாக்சி தெரிவித்தார்.
ஜூலை 5 அன்று, மத்திய அரசு வெளிநாடுகளில் போலி வேலை வாய்ப்பு, முகவர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிப்பு வெளியிட்டது.
இந்தநிலையில் நேற்று (புதன்கிழமை) சென்னை வந்த 13 இந்தியர்களை, தமிழ்நாடு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்றார். அமைச்சர் கூறுகையில், "மீட்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக மியான்மருக்கு அழைத்து செல்லப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் அவர்கள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளனர். மியான்மரில் இன்னும் 50 தமிழர்கள் உள்ளனர். அவர்களையும் திரும்ப அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று கூறினார்.
மீட்கப்பட்ட 13 பேரில் கோவையைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "நாங்கள் துபாயில் வேலைக்காக விண்ணப்பித்திருந்தோம். ஆனால் தாய்லாந்து அழைத்து செல்லப்பட்டோம். தாய்லாந்தை அடைந்த பிறகு, வேலை இல்லை என்பதை உணர்ந்தோம். எங்களை காரில் ஏற்றி வெகு தூரம் அழைத்து சென்றார்கள். இறுதியில் மியான்மர் அடைந்தோம். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வரை வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் " என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“