உத்த பிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று குழந்தைகளை இன்று காலை ஏற்றிக் கொண்டு சென்றது. இந்தப் பேருந்து ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றபோது எதிரில் வந்த ரயில் மோதியது. இந்த விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
பள்ளி மாணவர்கள் பயணித்த இந்தப் பேருந்தில், மொத்தம் 18 மாணவர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்கள் வெளிவர உள்ளன.
இந்தச் சம்பவத்தால் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தில் சோகம் பரவியுள்ளது. மாணவர்களின் சடலங்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார். இந்த விபத்து குறித்து விசாரணை உடனே நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில்:
,
“குஷிநகரில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் பலியானதில் துன்பம் சூழ்ந்துள்ளது. மறைந்த குழந்தைகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையான சிகிச்சை அளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார் (மொழிப் பெயர்க்கப்பட்டது)