ஒன்றரை மாத கைக்குழந்தையின் உயிரை காப்பாற்ற, திகில் பயணத்தை மேற்கொண்டுள்ளார், ஆம்புலன்ஸ் டிரைவர். 540 கி.மீ தூரத்தை 6 மணி நேரத்தில் கடந்து, சிறுமியின் உயிரை காப்பாற்றிய சம்பவத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.
சென்னையில் 2008ம் ஆண்டு, ஹிதேந்திரன் என்ற பிளஸ்டூ மாணவன் மூளை சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புக்களை தானமாக கொடுக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்தனர். சென்னை டிரிபிள் எம் மருத்துவமனையில் இதயம் மாற்று அறுவை சிகிச்சைக்கு எடுத்து செல்ல, தேனாம்பேட்டையில் இருந்து முகப்பேறு வரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, 20 நிமிடத்தில் இதயம் ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்டது. அதே போன்றதொரு சம்பவம், கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரியாரம் ஊரிலுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பாத்திமா லைபா என்ற ஒன்றரை மாத கைக்குழந்தை மூச்சுதிணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே, உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை. மருத்துவர்கள் விரைந்து செயல்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு புதன்கிழமை டைம் வாங்கினார்கள்.
கண்ணூர் மாவட்டம் பரியாரம் ஊரில் இருந்து திருவனந்தபுரம் 540 கிமீ தூரம். போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி
சென்றாலே, திருவனந்தபுரத்தை அடைய 14 முதல் 15 மணி நேரம் ஆகும். அதுவரையில் குழந்தையின் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பதால், போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினார்கள்.
குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டிய அவசியம் மற்றும் அவசரத்தை அறிந்து போலீசார் விரைந்து செயல்பட்டனர். போலீசார், சிவில் சமூக ஆர்வலர்களின் உதவியோடு, கண்ணூரில் இருந்து திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு ஏழு மணி நேரத்திற்குள் சென்றடைந்தனர்.
“அந்த மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றுவதற்காக வெளி ஆம்புலன்சை அழைத்திருந்தனர். உடனடியாக குழந்தையை வெளியேற்றி விட்டோம்” என்கிறார் பரியாரம் மருத்துவமனையின் பி ஆர் ஒ.
இந்த அவசர பயணத்திற்காக பாத்திமாவின் குடும்பத்தினர் கேரளாவில் உள்ள குழந்தை பாதுகாப்பு குழுவை (CPTK) அணுகினர். அவர்களின் உதவியோடு காசர்கோடு ஆம்புலன்சை ஓட்டுனர் தமிம் என்பவர் ஓட்ட தயாரானார்.
“எங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர். வாட்சப் குழு மூலம் இணைந்து செயல்பட்டோம். இந்த பயணத்திற்காக போக்குவரத்தை சரி பார்க்கும் காவல் துறை அதிகாரிகளையும் இந்த வாட்சப் குழவில் இணைத்து இருந்தோம். மேலும் ஆம்புலன்சில் ஜிபிஎஸ் இணைக்கப்பட்டு இருந்ததால் எங்களால் ஆம்புலன்சின் வழியை பின்தொடர முடிந்தது” என்கிறார் CPTK , கொல்லம் மாவட்ட தலைவர் ஷிபு ராவுத்தர்.
புதன்கிழமை இரவு 8:23 மணிக்கு பரியாரமில் இருந்து ஆம்புலன்ஸ் புறப்பட்டு மறுநாள் காலை 3:23 திருவனந்தபுரத்தை அடைந்துள்ளது. “பெட்ரோல் மற்றும் உணவிற்காக 20 நிமிடம் கோழிகோடில் நின்றது. அதை விட்டு கணக்கில் சேர்க்கவில்லை என்றால் பயணம் செய்த நேரம் 6.40 மணி நேரம் மட்டுமே” என்கிறார் அவர்.
கண்ணூர் போக்குவரத்து காவல் அதிகாரி, இரு இனோவா கார் ஆம்புலன்ஸ் உடன் இணைந்து சென்றது.
மேலும் பேசிய ராவுத்தர், இந்த முழு பயணம் சிறப்பாக முடிந்ததிற்கு முக்கிய காரணம் ஓட்டுனர் தமிம்தான் என்கிறார். பெரும் அழுத்தத்திலும் சிறப்பாக ஓட்டிய தமிமிற்கு நன்றி தெரிவித்தார். “எங்கள் அனைவரின் முயற்சியும் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது மட்டும் தான்” என்றார்.
இருப்பினும் திருவனந்த மருத்துவமனையில் குழந்தையின் நிலைமை சற்று கவலைக்கிடமாகவே இருக்கிறது. “எங்களால் முடிந்ததை நாங்கள் செய்து விட்டோம். இனி கடவுளின் கையில்” என முடிக்கிறார் நம்முடன் பேசிய ராவுத்தர்.